பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரத்தின் பிசின். கற்பூரத்தில் ஒரு வகை பளிதம் என்பது. பளிதத்தை அக்காலத்துத் தமிழர் வெற்றிலையோடு சேர்த்து அருந்தினார்கள். வெற்றிலையோடு அருத்திய கற்பூரம் பச்சைக் கற்பூரம் என்று பெயர் கூறப்பட்டது. அதற்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. பௌத்த பிக்குகளும் மற்றவர்களும் உணவு உண்ட பிறகு தாம்பூலத்துடன் பளிதம் சேர்த்து அருந்தினார்கள் என்பதை மணிமேகலை நூலினால் அறிகிருேம்.

'போனகம் எய்திப் பொழுதினிற் கொண்டபின்
பாசிலைத் தினரயலும் பளிதமும் படைத்து'

(மணி, 28: 242-243)

பளிதத்தில் (கற்பூரத்தில்) பலவகையுண்டு. "பல பளிதம்" என்று 10 ஆம் பரிபாடல் (அடி. 82 ) கூறுகிறது. ஒரு வகைப் பளிதத்தைச் சந்தனத்துடன் வந்து உடம்பில் பூசினார்கள். கடல்களும் தீவுகளும் கலந்த சாவக நாட்டிலே பவழம் (துகிர்) உண்டாயிற்று. பவழம் (பவளம் - துகிர்) என்பது பவழப் பூச்சிகளால் கடலில் உண்டாகும் பவழப் புற்று. கடலில் பவழப் பூச்சியால் உண்டாகும் பவழம் அக்காலத்தில் சாவக நாட்டிலிருந்து கிடைத்தது (மத்தியத் தரைக் கடலில் உண்டான பவழத்தை யவனர் கொண்டுவந்து விற்றனர்),

தமிழகத்துக் கப்பல் வணிகர் சாவக நாட்டுக்குக் கடல் கடந்து போய் அங்கு உண்டான வாசப் பொருள்களையும் பவழத்தையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத்துகிலையும் கொண்டு வந்து பழந் தமிழ் நாட்டில் விற்றார்கள்.

அக்காலத்தில் சீனர் தமிழ் நாட்டுக்கு வரவில்லை. அவர்கள் சாவகத்தோடு நின்று விட்டார்கள். அவர்கள் சாவகத்துக்குக் கொண்டுவந்த பட்டுக்கள், அங்குச் சென்ற தமிழக வாணிகர் வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்றார்கள். தமிழர் பட்டுத் துணியை ' நூலாக்கலிங்கம்' என்று கூறியதைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

சாவக நாட்டிலிருந்து கிடைத்த வாசப் பொருள்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வாசப் பொருள்களை விற்றவர்

39