பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


5. பிறநாட்டு வாணிகர்

ழங்காலத்துத் தமிழர் தரை வழியாகவும் கடல்வழியாகவும் பாரதநாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள், உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம்) முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்) அருமணவன் (Rāmañña), தக்கோலம் (Takkolas), கிடாரம் (கடாரம்), சாவகம் (கிழக்கித்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்ததை முன்னமே கூறினோம்.

தமிழ் வாணிகர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கே அநுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருந்தனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல் வெட்டினால் அறியப்படுகிறது என்பதையும் கூறினோம்.

தமிழக வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல் நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு பாஷைகளைப் பேசின மக்கள் தங்கியிருந்ததைர் சிலப்பதிகாரம் கூறுகிறது.

'பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மக்கள்
கலந்தினி துறையும் இலங்கு நீர் வரைப்பும்.'

(சிலம்பு, 5:10-12)

49