பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றாண்டு வரையில் நடந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோம் சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் சீஸர் அரசன், யவன-தமிழர் வாணிகத்தை விரிவுபடுத்தினான். உரோமாபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ் நாட்டில் சில இடங்களில் சமீபகாலத்தில் பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் பழங்காசுகள் சங்க காலத்தில் நடந்த தமிழர்-யவனர் வாணிகத் தொடர்புக்குச் சான்று பகர்கின்றனர். அக்காலத்தில் நடந்த தமிழர்-யவனர் வாணிகத் தொடர்பைப் பற்றி பிளைனி, தாலமி முதலான யவனர்கள் எழுதிய நூல்களிலிருந்து அறிகிறோம். ஒரு யவனர் , கிரேக்க மொழியில் எழுதிய செங்கடல் வாணிகம் என்று பெயருள்ள ஒரு நூல் உண்டு . (Periplus of the Erythraei) அதை எழுதியவர் பெயர் தெரியவில்லை . அந் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் யவன வாணிகர் செய்த வாணிகத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. உரோம் சாம்ராச்சியத்தையாண்ட அகஸ்தஸ் சக்கரவர்த்திக்கு மதுரையிலிருந்து ஒரு பாண்டியன் தூதுவரையனுப்பினான்.

வாணிகத்தின் பொருட்டு வந்த யவனர் துறைமுகங்களுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். ஏற்றுமதி இறக்குமதி முடிந்தவுடன் அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள். யவனர் சிலர் தமிழ்நாட்டிலே தங்கித் தொழில் செய்தார்கள். அவர்கள் தச்சுத் தொழிலில் தேர்ந்தவர்கள், யவனத் தச்சர் என்று மணிமேகலை (19:108) கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே (அரிக்கமேடு என்னும் இடத்தில்) இருந்த யவனப் பண்டகசாலையில் யவனத் தொழிலாளிகள் சிலர் கண்ணாடி மணிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியினால் தெரிகிறது.

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை அக்காலத்தில் கோட்டை மதிலுக்குள் இருந்தது. கோட்டை. வாயில்களில் யவன வீரர்கள் காவல் இருந்தனர். கோவலன் மதுரைக்குச் சென்றபோது கோட்டை வாயிலை யவன

53