பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(ஓரை மகளிர்) ஓரை என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல் அன்று, தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க ஹோரா என்பதன் திரிபு என்று கருதுவது உண்மையறியாதார் கூற்று. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், இந்நூலாசிரியர் எழுதிய "சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்" என்னும் நூலில் 20-34 ஆம் பக்கங்களில் காண்க.

அரிசி என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் ஒரிஜா (Oryza) என்று வழங்கப்படுகிறது. இச்சொல்லை யவனர் தமிழிலிருந்து எடுத்துக் கொண்டனர். யவன வாணிகர், தமிழ்நாட்டு ஊர்களான சோபட்டினத்தைச் சோ பாட்மா என்றும் காவிரியைக் கபிரிஸ் என்றும் முசிறியை முசிரிஸ் என்றும் கருவூரைக் கரோரா என்றும் மதுரையை மதோரா என்றும் ஆய்நாட்டை ஆமோய் என்றும் கூறினார்கள்.

அந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் என்ணெய் விளக்கு உபயோகிக்கப்பட்டது. மண்ணால் செய்த அகல் விளக்கையும் இரும்பினால் செய்த விளக்கையும் (இரும்பு செய் விளக்கு, நெடுநல்வாடை, 42) தமிழர் உபயோகித்தார்கள். யவன நாட்டிலிருந்து வந்த அன்னப் பறவையின் உருவமாக அமைக்கப்பட்ட 'ஓதிம' விளக்கையும், பெண் வடிவமாக அமைத்த 'பாவை' விளக்கையும் தமிழர் உபயோகித்தார்கள். இவ்விளக்கைச் செல்வர் வாங்கி உபயோகித்தார்கள்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேத் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி'

என்றும் (நெடுநல் வாடை, 101:103), "பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ" என்றும் (முல்லைப்பாட்டு, 85) பாவை விளக்கு கூறப்படுகிறது. சிலப்பதிகாரமும் (5:154) மணி மேகலையும் (1:45) பாவை விளக்கைக் கூறுகின்றன. "யவனர் ஓதிய விளக்கை"ப் பெரும்பாணாற்றுப் படை கூறுகிறது (வரி 316-317).

56