பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீவின் பெயரைத்தான் அக்காலத் தமிழர் அங்கிருந்த எல்லாத் தீவுகளுக்கும் பொதுப் பெயராகக் கூறினார்கள். சாவகத் தீவில்தான் தமிழர் முக்கியமாக வாணிகம் செய்தார்கள். சாவகத் தீவையரசாண்ட அரசர்கள் வாணிகத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

இதைச் சூழ்ந்திருந்த மற்றத் தீவுகளில் உற்பத்தியான பொருள்கள் எல்லாம் சாவகத் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழ வாணிகரும் வட இந்தியாவிலிருந்து சென்ற இந்திய வாணிகரும் சீன நாட்டிலிருந்து சென்ற சீன வாணிகரும் சாவகத் தீவுடன் வாணிகஞ் செய்தார்கள், அக்காலத்தில் சாவகம் சீன நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே மத்திய வாணிக நிலையமாக இருந்தது.

இந்தத் தீவுகளில் எரிமலைகள் அவ்வப்போது நெருப்பையும் சாம்பலையும் கக்கின. இந்தச் சாம்பல் அந்தப் பூமிக்கு வளத்தையும் செழிப்பையும் தந்தது. அக்காலத்தில் மற்ற நாடுகளில் கிடைக்காத பொருள்கள் (இலவங்கம், சாதிக்காய், குங்குமப்பூ, பளித வகை (கர்ப்பூர வகை) முதலான வாசப் பொருள்கள்) அங்கு உண்டாயின.

சாவா தீவின் வடக்கே அதையடுத்து 'மதுரா' என்னும் சிறு தீவு இருக்கிறது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து போய்க் குடியேறின அக்காலத்துத் தமிழர் தங்கி இருந்த இடமாகையால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. சாவா தீவில் மலைகளிலிருந்து தோன்றி வடக்கே ஓடி கடலில் விழுகிற ஆறுகளில் ஒன்றின் பெயர் ஸோலோ என்பது. ஸோலோ ஆறு மதுரா தீவுக்கு அருகில் கடலில் விழுகிறது. இந்த ஆற்றின் கரையில் சில ஆண்டுகளுக்கு முன், மிகப் பழைய மனிதனுடைய எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. அது 15,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்பு என்று கூறுகிறார்கள், இந்த எலும்புக்கூடு எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே இன்னொரு எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது முன்னைய எலும்புக் கூட்டைவிட மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த எலும்புக் கூட்டுக்கு 'ஜாவா மனிதன்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

58