பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிற முகத்துவாரத்தில் இருந்தது. இதற்கு மேற்கே நெல்லூர் வட பெண்ணையாற்றின் கரைமேல் இருக்கிறது. இக்காலத்தில் இவை ஆந்திர தேசத்தைச் சேர்ந்து இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கடைச்சங்க காலத்திலேயும் இவை தமிழ்நாடாக இருந்தன. அக்காலத்தில் இது தொண்டை நாட்டுத் துறைமுகப் பட்டினமாக இருந்தது. கொல்லத்துறை, நெல்லூர், பெண்ணையாறு என்னும் பெயர்களே தமிழ்ப் பெயர்களாக இருந்தன. கொல்லத்துறை பழந்தமிழ் நாட்டின் வட கோடியில் கிழக்குக் கரையில் இருந்தது. கொல்லத்துறை என்னும் பெயர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கண்டகோபால பட்டினம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அதன் பழைய பெயர் மறைந்துவிடவில்லை. கொல்லத்துறையான கண்ட கோபால பட்டினம் என்று அது கல்வெட்டுச் சாசனங்களில் கூறப் படுகின்றது.

தமிழ் நாட்டின் வட எல்லை வேங்கடமலை (திருப்பதி மலை) என்று பழந்தமிழ் நூல்கள் கூறினாலும் அதன் சரியான வட எல்லை வடபெண்ணையாறே. ஆற்றைக் கூறாமல் மலையை எல்லையாகக் கூறியதன் காரணம் அது மலை என்பதற்காகவே. பழந்தமிழ் நாட்டின் வட எல்லை வட பெண்ணையாற்றின் தென்கரையாக இருந்தது. தொண்டை நாட்டின் (அருவா நாட்டின்) இருபத்து நான்கு கோட்டங்களில் வட கோடிக் கோட்டமாக இருந்த பையூர் இளங்கோட்டம் வட பெண்ணையாற்றின் தென்கரையில் இருந்தது என்பதைக் கல்வெட்டெழுத்துச் சாசனங்களில் அறியப்படுகின்றது. பழந்தமிழ் நாட்டின் வட எல்லைக்கும் பழைய ஆந்திர நாட்டின் தென் எல்லைக்கும் வரம்பாக வடபெண்ணை யாறு அமைந்து இருந்தது. வடபெண்ணையாற்றின் முகத் துவாரத்தில் தென்கரை மேல் இருந்த கொல்லத்துறை அக்காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.

கொல்லத்துறை துறைமுகத்தைப் பற்றிச் சங்கச் செய்யுட்களில் கூறப்படவில்லை. எல்லாத் துறைகளையும்

65