பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டன. இவை உடைந்து கிடந்தன. அக்காலத்து அரசர், யவனர் கொண்டுவந்த மதுபானத்தை யருந்தினார்கள் என்பது நக்கீரர் பாட்டினால் தெரிகிறது. பாண்டியன் இல வந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை அவர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

'யவனர், நன்கலம் தந்ததண் கமழ்தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கினி தொழுகுமதி ஓங்குவாள் மாற'

(புறம், 56: 18-21)

நக்கீரர், யவனர் கொண்டுவந்த 'தண்கமழ் தேறலை'க் கூறுவதற்கு ஏற்பவே யவனருடைய மதுச்சாடிகள் அரிக்க மேட்டு அகழ்வாராய்ச்சியில் அகப்பட்டுள்ளன.

சிவப்புக் களிமண்ணால் செய்யப்பட்ட யவன விளக்கின் உடைந்த துண்டுகளும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப் பட்டன. சங்க இலக்கியங்களிலே யவன விளக்குகள் கூறப் படுகின்றன. யவன விளக்கை நக்கீரர் கூறுகிறார்.

‘யவனர் இயற்றிய வினைமான் பாவை
கையேத் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத் திரி கொளீய குரூஉத்தலை நிமிர்ஒளி'

(நெடுநல்வாடை, 101-103)

என்று பாவை விளக்கைக் கூறுகிறார்.

கடியலூர் உருத்திரங் கண்ணனார் 'யவனர் ஓதிம விளக்'கைக் கூறுகிறார், ஓதிம விளக்கு என்பது அன்னப் பறவையின் உருவம் போன்றது. மீன்குத்திப் பறவை வேள்வித் துணிகள் மேல் அமர்ந்திருப்பது 'யவனருடைய ஓதிம விளக்கு' போல இருந்தது என்று உருத்திரங் கண்ணனார் கூறுகின்றார் (பெரும்பாணாற்றுப்படை, 311-318). ஆனால் அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யவனர் விளக்குத்துண்டு யவனருடைய பாவை விளக்கும் அன்று; ஓதிய விளக்கும் அன்று. அது சாதாரணமான கைவிளக்கின் உடைந்த பகுதி. இந்த விளக்கு கி.பி. முதல் நூற்றண்டில் செய்யப்பட்டது.

71