பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருங்கூரும் ஊணுரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் என்று பெயர் பெற்றிருந்தது என்பதை மதுரைக் காஞ்சியினால் அறிகிறோம். தாலமி என்னும் கிரேக்கர் கூறுகிற சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூர் ஆகும். மதுரைக் காஞ்சி இந்த நெல்லூரின் துறைமுகத்தைக் கூறுகிறது. 'தொடுவானம் பொருத்திய அச்சந்தருகின்ற பெரிய கடலிலே (அக்கரைத் தீவுகளிலிருந்து) அலைகளைக் கிழித்துக் கொண்டு காற்றின் உதவியினால் இக்கரையையடைவதற்குப் பாய்களை விரித்துக்கொண்டு வந்த பெரிய நாவாய்கள் இந்தத் துறைமுகத்திலே கூட்டமாக வந்து தங்கின, நாவாய்களிலிருந்து பண்டங்களை இறக்குமதி செய்தபோது முரசு முழங்கிற்று. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கியிருந்த காட்சியானது வெள்ளத்தை முற்றுகை செய்யும் பால் போலத் தோன்றிற்று. இப்படிப்பட்ட, வாணிக வளமுள்ள சாலியூரை (நெல்லூரை)க் கொண்ட பாண்டியன் நெடுஞ் செழியன்' என்று பொருளுள்ள செய்யுளைக் கூறுகின்றது மதுரைக் காஞ்சி:

'வான் இயைந்த இருமுந்நீர்ப்
பேஎ நிலைஇய பெரும் பௌவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன்னிசைய முரச முழங்கப்
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துாங்கிருக்கைந்
தெண்கடற் குண்டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
கார் கொண்ட உயர் கொற்றவ'

(75-88)

பாண்டிய நாட்டுக் கடற்கரை வளத்தையும் வாணிகத்தை யும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் கூறுகிறார்.

85