பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாமிரபரணி ஆறு அடித்துக் கொண்டு வந்த மணலும் கடல் அலை அடித்துக் கொண்டு வந்த மணலும் ஆக இரண்டு புறத்திலும் மணல் தூர்ந்தபடியினால்தான். மணல் தூர்ந்தது வெகு காலமாக நடந்து கொண்டு வந்து கடைசியில் கடலே மறைந்து போயிற்று. கொற்கைப் பட்டினம் இருந்த இடம் இப்போது கடற்கரைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் மாறமங்கலம் என்னும் பெயர் பெற்றிருக்கின்றது. கி.பி. இரண்டாம் நூற்முண்டின் பிற்பகுதியில் கொற்கையிலிருந்த பாண்டிய இளவரசன் வெற்றிவேற்செழியன்.

கொற்கைப் பட்டினம் துறைமுகப் பட்டினமாக இருத்ததுமல்லாமல், அங்கு முத்துக்களும் சங்குகளும் விற்கப்பட்டன. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும், சங்குகளும் உண்டானபடியால் இங்கு முத்துகளும் சங்குகளும் கிடைத்தன.

குமரி

இது பாண்டிய நாட்டின் தெற்கே குமரிக் கடலில் இருந்தது. கன்னியாகுமரி என்றுங் கூறப்படும். இது துறைமுகப் பட்டினமாகவும் புண்ணியத் தீர்த்தமாகவும் இருந்தது. இந்தத் துறைமுகத்தைத் தாலமி, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொமரா, கொமராய், கொமரியா என்று அவர்கள் குமரியைக் கூறியுள்ளனர், இத்துறைமுகத்தைக் 'குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுகின்றது. பாண்டியனைக் 'கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்' என்று சிலம்பு கூறுகின்றது. பிற்காலத்தில் இராமேசுவரம் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவதற்கு முன் கொற்கைத் துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டு, கங்கையில் நீராடிவவர் குமரிக்கு வந்து நீராடிச் சென்றார்கள். பிற்காலத்தில் இந்தத் துறைமுகத்துக்கு வாணிகக் கப்பல்கள் வருவது நின்று போயிற்று. கொற்கைத் துறைமுகத்துக்கு அப்பால் கொற்கை என்றும் ஊர் இருந்ததென்றும், அங்குக் கோட்டைகள் அமைந்திருந்தன வென்றும் அங்கு ஒரு கப்பல் தொழிற்சாலையிருந்ததென்றும் பெரிபுளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் கூறுகின்றது.

87