பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னும் பெயர் உள்ள இந்தப் பட்டினத்தைத் தமிழ்ப் புலவர் 'துவ்வா நறவு' (உண்ணப்படாத நறவு) என்று கூறினார். சேர மன்னர் துளு நாட்டு நன்னனை வென்று துளுநாட்டு ஆட்சியைக் கைக் கொண்டபோது, ஆடு கோட் பாட்டுச் சேரலாதன் (சேரன் செங்குட்டுவனுடைய மாற்றாந்தாயின் மகன்) இந்த நறவுத் துறைமுகப் பட்டினத்தில் இருந்தான் என்று பதிற்றுப் பத்து (6 ஆம் பத்து 10 ஆம் செய்யுள்) கூறுகின்றது. யவன நாட்டுக் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். அவர்கள் நறவை 'நவ்ரா' என்று கூறினார்கள்.

தொண்டி

இது மேற்குக் கடற்கரையில் சேரநாட்டில் இருந்த தொண்டி. (பாண்டி நாட்டில், கிழக்குக் கடற்கரையிலும் ஒரு தொண்டி இருந்தது.) ஐங்குறு நூற்றில் நெய்தற் பத்தைப் பாடிய அம்மூவனார் தொண்டிப்பத்து என்னும் தலைப்பில் பத்து செய்யுட்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய தொண்டி இந்தச் சேரநாட்டுத் தொண்டியாகும். இந்தத் தொண்டிப் பட்டினம் கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களின் ஆட்சியிலிருந்ததாகத் தெரிகின்றது . பொறையர் சேர அரசர்களின் இளைய வழியினர். கொங்கு நாட்டையரசாண்ட அவர்களுக்கு, உள் நாடாகிய கொங்கு நாட்டில் துறைமுகப் பட்டினம் இல்லாதபடியால், சேர நாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய தொண்டியை வைத்திருந்தனர் என்று தோன்றுகின்றது. சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாகிய (மாற்றாந்தாயின் மகன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், வடக்கே தண்டாரணியத்திலிருந்து கொண்டு வந்த வருடைப் பசுக்களைத் தொண்டிக்குக் கொண்டு வந்து தானங் கொடுந்தான்,

'தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுட் டந்து கொடுப்பித்து.'

(6 ஆம் பத்து. பதிகம்)

சங்க காலத்திலிருந்த பொய்கையார் என்னும் புலவர் இந்தத் தொண்டியில் வாழ்ந்தவர். (புறம் , 48), தொண்டித்

91