பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101


பெறாத சாணம் மெழுகித் தூய்மை செய்யப் பெறாத திண்ணைகளையுடைய அம்பலம் என்று வருவதனால் அக்காலக் கோயில்கள் கட்டப்பட்ட விதத்தை அறிய முடிகிறது.

கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சோழன் செங்கணான் சிவபெருமானுக்கும் திருமாலுக்குமாக எழுபதுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைச் செங்கல்லால் கட்டினான்.34

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச் சோழன் 35

என இதனை அப்பர் தேவாரமும் கூறுகிறது. இவை யாவும் செங்கற் கோயில்களாகவே அமைந்தன என்று அக்கால வரலாறு கொண்டு உய்த்துணர்ந்து உரைக்கிறார் அறிஞர் சீனி வேங்கடசாமி.

பாறைக் கோயில்கள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பெருவேந்தனான மகேந்திர வர்மன் என்னும் அரசன் ஆட்சி செய்தபோது (கி.பி.600 முதல் 630 வரை) கோயிற் கட்டடக் கலையில் புது மாறுதல் ஒன்று நிகழ்ந்தது.

இவன் காலத்தில் பெரிய கற்பாறைகளைக் குடைந்து எழில் வாய்ந்த குகைக் கோயில்களை (பாறைக் கோயில்கள்) அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கற்பாறைகளைச் செதுக்கித் தூண்களையும் முன் மண்டபத்தையும் அப்பால் கருவறை எனப்படும் திருவுண்ணாழிகையையும் அமைக்கும் பாறைக் கோயில் முறை இவன் காலத்திலேயே ஏற்பட்டது.36

இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுகாவைச் சேர்ந்த மண்டகப்பட்டு என்னும் ஊரில் மகேந்திர வர்மன் அமைத்த பாறைக்கோயில் ஒன்று உள்ளது. 37

ப-7