பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

111


மாடங்களிலும் சுவர்களிலும் சித்திரங்கள் தீட்டப்பட் டிருந்தன.75

சுவர்களை அமைத்தமுறை, ஒவியந்தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகள் கட்டடக்கலையின் ஒரு பகுதியாகிய உள்ளலங்கார வேலையிலும் பழந்தமிழர் சிறப்புப் பெற்றிருந்தனர் என்பதனையே காட்டுகிறது.

எட்டுத்தொகை நூலுள் ஒன்றாகிய பரிபாடலில் கூட இதற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் குகைக் கோயிலில் அமைந்த ஓவியம் பற்றிய வருணனையில்,

நின் குன்றத்து
எழுதெழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் 76

என்று குன்றம்பூதனார் என்ற புலவர் பாடியுள்ளார். ‘சித்திர மாடத்துத் துஞ்சிய நெடுமாறன்’ 77 என்றே ஒர் அரசன் புறநானூற்றில் குறிக்கப்படுகிறான். மாடங்களில் அழகிய ஓவியங்கள் தீட்டப்படுவது பழந்தமிழர் கட்டடக் கலை வழக்கமாயிருந்தது தெரிகிறது.

கட்டடக் கலையும் பாதுகாப்பும் (Defence Architecture)

கோயில்கள், அரண்மனைகள் போலவே பாதுகாப்புக்கான கோட்டை கொத்தளங்களையும் அகழி, மதில் போன்ற அவற்றின் உறுப்புக்களையும் தமிழர்கள் சிறப்பாக வகுத்திருக்கின்றனர்.

அரசன் இல்லத்திற்கு அரண்மனை என்றே பெயர் வைத்ததில் பாதுகாப்புப் பொருளும் இணைந்து வருவது காணற்குரியது.

பெரும்பாலான அரசர் வசிப்பிடங்கள் கோட்டைக்குள்ளேயே அமைந்திருந்தன என்பதும் தெரிகிறது.

"பழங்கால மதில்கள் இயந்திரக் கலை நுட்பமும், இராணுவப் பொறி நுட்பமும் சேர்ந்து விளங்கின”78