பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கோட்டை மதில்களையும் பாதுகாப்புக்கான அகழிகளையும் அமைப்பதில் தமிழர்கள் மிகமிக உயர்திறன் பெற்றிருந்ததை அறியப் போதுமான சான்றுகள் உள்ளன.

போர்க்காலப் பயன்களுக்காகக் கரந்துபடை என்னும் சுரங்கப் பாதைகளையும் அமைத்துக் கொண்டனர் தமிழ் மன்னர்கள்.

நெடிதுயர்ந்த மதில்களில் பாதுகாப்புக்கான பல்வேறு வகை விசைக் கருவிகள் பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன. தாமாகவே வளைந்து விரைவாக அம்புகளை வீசும் விற்பொறிகள், கருங்குரங்கைப் போன்ற அமைப்புடைய விசைப்பொறிகள், கற்களை உமிழ்வதுபோல வீசியடிக்கும் கவண்பொறிகள், பகைவர் நெருங்கிவர முயலும்போது அவர்மீது கொதிக்கிற எண்ணெயைக் கவிழ்த்துவிடும் பொறிகள், இரும்பைக் காய்ச்சி ஊற்றும் உலைப்பொறிகள், பகைவரைப் பற்றிக் கழுத்தை இறுக்கி முறுக்கும் பொறிகள், ஆளிதலைப் புலிவடிவாக அமைந்த புதுமைப் பொறிகள், அகழியைத் கடந்து மதிலில் ஏற முயலும் பகைவர்களைக் கீழே தள்ளிவிடும் இரும்புக் காப்புக்கள், தூண்டில் பொறிகள், பன்றிப் பொறிகள், ஊசிப் பொறிகள், சங்கிலிப் பொறிகள் முதலான பல்வேறு வகை இயந்திரப் பொறிகளை மதிலில் கட்டி யிருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் விவரித்துக் கூறுகிறது79 பொதுமக்களுக்கான பொறியியல் அறிவுடன் (Civil Engineering) இராணுவப் பொறியியல் அறிவை (Military Engineering) யும் பழந்தமிழா்கள் ெபற்றிருந்தார்கள் என்பதையே இச்சான்றுகளால் உணரமுடிகிறது.

“அரண்மனையிலிருந்து கோயிலுக்குச் செல்லவும், ஊருக்கு வெளியே இரகசியமாகச் செல்லவும் தமிழ் மன்னர்கள் சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டனர்.