பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் நான்கு

கட்டடக் கலைஞரும் கட்டடங்களும்

பழந்தமிழர் நாளில் கட்டடங்களையும் கோயில்களையும் அரண்மனைகளையும் அமைத்த சிற்பிகளின் தனித் தனிப் பெயர்கள் தெரியவில்லை என்றாலும் சில சாசனங்கள் கல்வெட்டுக்கள் மூலம் சிற்பத் தொழிலின் தனிப் பெயர்கள் சில தெரிகின்றன.

அவையும் கோயில்களைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களே தவிர வீடுகள், அரண்மனைகளைக் கட்டிய சிற்பிகளின் பெயரை அதிகம் அறிய வாய்ப்பில்லை. அவை எங்கும் இடம் பெறவும் இல்லை.

சில சிற்பிகள் பெயர்

மாமல்லபுரத்துத் தேர்க் கோயில்களையும் பாறைக் கோயில்களையும் உருவாக்கிய சிற்பாசாரியர்களின் பெயர்கள் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி என்னும் சிற்றுாருக்கு அருகில் நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன.1 இப் பெயர்கள் யாவும் மாமல்லபுரத்துச் சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் என்றே கருதப்படுகின்றன. அவையாவன :

1. கேவாத பெருந்தச்சன், 2. குணமல்லன், 3. பய்ய மிழிப்பான், 4. சாதமுக்கியன், 5. கல்யாணி, 6. திருவொற்றியூர் அபாஜர், 7. கொல்லன் ஸேமகன்2