பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

133



இந்நிலம் விளங்கப் பாவையர்க் கியற்றுவ தாங்கெனப் படுமே27

என்று சுத்தானந்தப் பிரகாச மேற்கோளும் காட்டப் படுகிறது.

அரங்கின்கண் விளக்கு ஒளியில் ஏனையவற்றின் நிழல் பட்டு விடாதபடி கவனம் எடுத்துக்கொண்டது.28 மற்றொரு கட்டட நிர்மாண நுணுக்கமாகும். தூண்களின் நிழல் அரங்கில் பட்டு விடாதபடி அரங்கமைத்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

"தூண்களின் நிழல் நாயகப் பத்தியின் கண்ணும், அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி’ என்கிறார் அரும்பதவுரையாசிரியர்.29

அடுத்துத் திரைச்சிலை பற்றியும், அரங்கை அணி செய்தல் பற்றியும் கூறுகிறார்.

திரைச்சீலை எழினி எனப்படுகிறது. “வடமொழியில் வழங்கும் 'யவனிகா' (திரைச்சீலை) என்பது யவனரிடமிருந்து வந்தது என்ற பொருளுடையது என்பதை மறுத்துத் தமிழின் ‘எழினி'யே, வடமொழியில் அம்மொழி உச்சரிப்பில் ‘ழ’ இல்லாத காரணத்தால் ‘யவனிதா’ ஆயிற்று எனக் கூறுவார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.30 சித்திரங்கள் தீட்டப்பட்ட நாடக அரங்கத்திரைச்சீலைகள்,

1. ஒருமுக எழினி, 2. பொருமுக எழினி, 3. கரந்துவரல் எழினி

என மூன்று வகையாக வழங்கப்பட்டன.31 இனி அவற்றைப் பற்றிய விவரமான செய்திகள் வருமாறு:

(அ) இடத் தூணின் நிலையிடத்துத் தொங்கவிடப் படுவது ஒருமுக எழினி.
(ஆ) வலத் தூணின் நிலையிடத்துத் தொங்கவிடப் படுவது பொருமுக எழினி.

ப-9