பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

இத்தகைய இலக்கணம் முழுமையாகப் பெற்றது காவிரிப்பூம் பட்டினம் என்னும் பெயரையுடைய பூம்புகார் நகராகும்.

கோநகரங்கள் சுற்றிலும் கோட்டைச் சுவர்கள் கொண்டது. புறநகரில் படைகள் தங்கும் இடங்கள் கொண்டது. வானுயர் மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கொண்டது. நால்வகைப் படை இருக்கைகள் கொண்டது. பலவகையான கோயில்களும் அம்பலங்களும் அறக்கோல் டங்களும் கொண்டது. அரசனின் அரண்மனையும் தோட் டமும், பூங்காக்களும் இளமரக்காவும் உடையது. இது மதுரை நகருக்குப் பொருந்தும். இதனை இராஜதானி’ என வடமொழியில் கூறுவர். ஆகக் கிராம அமைப்பு, ஊரமைப்பு, நகரமைப்பு என இக்கலை தோன்றி வளர்ந்த வரலாற்றினை ஒருவாறு அறிகிறோம்.

இனி நகரமைப்பையே நேர்முகமாகக் காணலாம். பூம்புகார், மதுரை ஆகிய இரு நகரங்கள் பற்றி முழுமை யாகவும், உறந்தை வஞ்சி, காஞ்சிபுரம் பற்றி ஒரளவு காண்பதும் இவ்வாய்வின் நோக்கமாகும்.

பூம்புகார், மதுரை ஆகிய இரு நகரங்களையும் நன்கறியச் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு என்னும் இரு நூல்களே போதுமெனினும் தேவையான பிற மேற்கோள்களையும் நாடிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. மதுரை நகரின் புராண முறையான அமைப்பு வரலாற்றினைத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

உரிய தகுதிகளும் பட்டினம் என்கிற பெருமையும் இருப்பதால் முதலில் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகாரை ஆராயலாம்.

வாணிகச் சிறப்பு, பல நாட்டினர் குடியிருப்பு-கலைப் பெருமைகள், அமைப்பு முறை ஆகியவற்றால் இந்நகரின் பெருமை முதன்மையானதாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.