பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வளமிகு வாழ்க்கையினராக யவனர் வாழ்ந்தனர். கடல் வாணிபம் மூலம் பொருள் சேர்க்கத் துணிந்த வேறு பிற நாட்டு வாணிகர்களும் கடற்கரை ஓரமாகவே வாழ்ந்தனர். பட்டினப்பாலையும் இதனை விவரித்துக் கூறுகிறது.9

வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
துரசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் மைந்தின விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்10

எனச் சிலம்பும் வருணிக்கிறது. வண்ணம், சுண்ணம் சந்தனம், நறும்புகைக்குரிய மணப்பொருள்களும் நறுமலர் முதலியவும் விற்போர் விலை கூறித் திரியும் பெருந்தெருக்களும், பட்டு நூலாலும், நுண்ணிய மயிராலும், பருத்தி நூலாலும், அழகிய ஆடைகளை நெய்ய வல்ல பட்டுச் சாலியர் முதலியோர் இருக்கும் இடங்களும் பவளமும், ஏனைய மணிகளும், பொன்னும் ஆகிய இவற்றைப் பொன் அணிகலன்களுடன் வைத்து ஒப்பு நோக்கி மதிப்பிட வல்லார் வாழும் வளம் மலிந்த வீதிகளும், நெல் வரகு முதலிய தானியங்களை நிறையக் குவித்து வைத்துள்ள கூலக் கடைத் தெருவும், பிட்டு அப்பம் முதலிய சிற்றுண்டிகளைச் செய்து விற்போர், கள், மீன், உப்பு, நிணம்