பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

169



சக்கரவாளக் கோட்டம் சிற்ப நூல், கட்டடக்கலை, நகரமைப்பு ஆகியவற்றின் தலைவனாகிய மயனால் நிருமிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.60

எவ்வெச் சாதியினர் எவ்வெவ்விடங்களில் புதைக்கப் பட்டனர் என்பதை விளக்கப் பல தனித்தனிக் கோட்டங்கள் அந்தச் சக்கரவாளத்தில் இருந்தன. இடுகாட்டுத் தெய்வங்கள் உறையத் தக்க பல தூண்கள் இருந்தன. துறவிகளை வழிபடுவோர் ஓசை, பிணங்களை அடக்கம் செய்ய வருவோர் எழுப்பும் அவலக் குரல்கள், நரிகளின் ஓலம், கோட்டான்களின் அலறல் இவையனைத்தும் அங்கு இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருக்கும். பேய்கள் வாழும் வாகை மன்றம், பறவைகள் தங்கும் வெள்ளில் மன்றம், காபாலிகர்கள் வாழும் வன்னி மன்றம், விரதங்களால் இளைத்த மேனியையுடையோர் இறந்த பின் அவர் தலை ஓடுகளை மாலையாகக் கட்டுவோர் வாழும் இரத்தி மன்றம், பிணங்களைத் தின்போர் வாழும் வெள்ளிடை மன்றம் என்னும் ஐவகை மன்றங்கள் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன.61

நகரின் பரப்பளவு

புகார் என்ற சொல்லுக்குக் கடல் முகத்துவாரத்தில் அமைந்த நகரம் என்று பொருள்.62 காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டை, அன்னையாக அமைந்து புரந்த காவிரி கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இருந்த நிலப்பகுதியில் அமைந்திருந்தமையால் புகார் என்றும், காவிரிப் பூம்பட்டினம் எனவும் இந்நகர் பெயர் பெற்றிருந்தது.63

"சங்க காலத்தில் சோழநாட்டின் உள்நாடாகிய புகார் நாடு என்ற நாட்டுப் பகுதிக்குத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம்".64

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு காவதம் (சுமார் முப்பது மைல் பரப்பளவு) பரப்புடைய