பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

17

யும் ஆர்வத்தையும் கட்டடக் கலையிலும் நகரமைப்பிலும் செலுத்தியுள்ளனர்.

இக்கலைகள் இரண்டிற்குமே தமிழ் இனம் எடுத்துக்காட்டான நிலைகளைக் கொண்டிருந்தது. இக்கலைகளின் வளர்ச்சிக்கும் திறனுக்கும் தமிழகமும் தமிழினமும் நிலைக்களனாக விளங்கியதை வழக்கிலிருந்தும், இலக்கியங்களிலிருந்தும் ஆய்ந்து நிறுவுவதே இங்கு நோக்கமாகிறது.

கலைகள், பண்பாடு, சமயம், இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழினம் இணையற்ற பெருமைகளைப் பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக விளங்கவல்ல சிறப்புக்களைப் பெற்றுள்ள இனங்களில் தமிழினம் முதன்மையானது என்பது ஐயத்துக்கு இடமின்றிப் பலராலும் பலமுறை நிறுவப்பட்ட உண்மையாகும்.

இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கட்டடக்கலை, நகரமைப்பு ஆகிய இரு பிரிவுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஒன்றிலிருந்து மற்றொன்று விரிந்து பரந்து கிளைப்பது. கட்டடக்கலை தனி ஒரு பகுதித் திறனுக்கு (Departmental excellence) உரியது என்றால் நகரமைப்பு முழுமையான திறனுக்கு (Total excellence) உரியது.ஆகும்.

கட்டடங்கள், தெருக்கள் முதலியன சீராக அமைந்தால்தான் நகரமைப்பு அழகாயிருக்கும். ஆக இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றானவை-ஒன்றை ஒன்று இன்றியமையாதவை என்றும் அறிய முடிகிறது.

கட்டடக் கலை, நகரமைப்பு (Architecture and Urban planning) ஆகிய துறைகளிலும் தமிழர் சிறப்புற விளங்கியுள்ளனர் என்பதை நூற்சான்றுகள் கொண்டு ஆராயவும், நிறுவவும் நிரம்பிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாய்ப்பை இந்த ஆய்வு பயன்படுத்திக் கொள்கிறது.