பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடினான். இறைவனை வழிபட்டு மகிழ்ந்தான். காட்டை அழித்து, நகரமைப்புப் பணியைத் தொடங்குமாறு உத்தரவிட்டான். அமைச்சர்கள் உடனே நகரமைப்புத் தொழிலில் வல்லவர்களை அழைத்து வருமாறு நான்கு திசைகளிலும் ஏவலர்களை அனுப்பினர்.

பிறைமதியின் பிளவு போன்ற கூரிய கொடுவாளையும், கோடரியையும் சுமந்த தோளையுடையவர்கள், செருப்பணிந்த காலினருமாகப் பலவகைத் தொழிலாளர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் காடுகளை வெட்டி நிலம் தடுத்தனர். காடுகள் அழிக்கப்பட்ட பின்பு, நகரத்தை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி மன்னன் அமைச்சர்களையும் சான்றோர்களையும் கலந்து பேசினான்.

அப்போது அங்கே சித்தர் உருத்தாங்கிச் சிவபெருமான் வந்தார். பாண்டிய மன்னன் அவரை வணங்கி, ஆசனம் கொடுத்தான். ஒளிமயமான உருவினரான அந்தச் சித்தர் சிவாகமங்களின் வழிமுறைப்படி சிற்ப நூல் விதிகள் வழுவாமல் நகரமும், ஆலயமும், கோபுரமும் இன்னின்னவாறு அமைத்தல் வேண்டும் என்று வகுத்துரைத்துவிட்டு மறைந்தார்.

பின்பு சிற்பநூல் வல்லார் வரவழைக்கப்பட்டனர். சித்தர் கூறிச் சென்றவாறே நகரமும், கோவிலும் அமைக்கும் செயல்கள் தொடங்கப்பட்டன. பதும மண்டபம், நடு மண்டபம், (அர்த்த மண்டபம்) பெரிய மண்டபம், (மகா மண்டபம்) அறுகாற்பீடம், நடன மண்டபம், திருவிழா மண்டபம், வேள்விச் சாலை, மடைப் பள்ளி, கணபதி, முருகன் முதலிய தேவர்களின் கோயில்கள், மீனாட்சியம்மையின் திருக்கோயில், திருமாளியைக் கொண்ட திருமதில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், சுற்று மதில்கள். அகழிகள் ஆகியவை அமைக்கப் பட்டன.9