பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



யில் பத்திரகாளியையும் நகரின் காவல் தெய்வங்களாக நிறுவினான்.

வேதங்களில் வல்லவர்களான அந்தணர்களைக் காசி நகரிலிருந்து வரவழைத்து மதுரையில் குடியேற்றுவித்தான். நகரில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் முறைப்படி வாழ்ந்தனர். பாண்டிய நாட்டுக்கு ஒரு திலகம் பதித்தது போல் மதுரையைக் குலசேகரன் வளப்படுத்தினான்.12

நான்மாடக் கூடல்

வருணன் மதுரையை அழித்து விடும் திட்டத்தோடு, தன்னுடைய ஏழு மேகங்களையும் ஏவி விட்டான். மதுரை நகரின் மேலே வானம் ஊழி இறுதியே போல இருண்டது.12 எங்கும் கருமை சூழ்ந்தது. புயற் காற்று வேகமாக வீசலாயிற்று. ஏழு மேகங்களும், படையெடுத்து வந்தாற் போல, மதுரை நகரைச் சூழ்ந்துகொண்டது. அபாயம் வந்தது. -

பாண்டிய மன்னன் செய்வதறியாது திகைத்தான். சோமசுந்தரக் கடவுள் திருக்கோயிலை அடைந்து, வணங்கி நகரத்தையும் மக்களையும் காப்பாற்றுமாறு வேண்டினான்.

பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இரங்கி, சிவபெருமான் தம் சடைமுடியிலிருந்து நான்கு மேகங்களை ஏவ-அந்நான்கு மேகங்களும் மதுரை நகரின் நான்கு எல்லைகளையும் சுற்றி வளைத்துக் காப்பது போல, நான்கு பெரிய மாடங்களாகிக் காத்து வருணனின் ஏழு மேகங்களையும் விலக்கச் செய்தார். சிவபெருமான் ஏவிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகி நகரத்தை மறைத்ததனால், வருணன் ஏவிய ஏழு மேகங்களும் ஏதும் செயலறியாது தோற்றுத் திரும்பின.14