பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

189


எனக் கல்லாடத்திலும் மதுரையைச் சூழ அமைந்த பகுதிகள் கூறப்படுகின்றன.

மலைகள்-ஆறுகள்

வையை ஆற்றின் வலப்புறமாக அமைந்துள்ள மதுரைக்கு அருகில் ஆனை மலை, பசு மலை, நாக மலை ஆகிய மூன்று மலைகளும், சற்று வடபால் தள்ளித் திருமால் குன்றம் என்னும் அழகர் மலையும் அமைந்துள்ளன. திருமால் குன்றத்தை வழியாகக் கொண்டு, மதுரைக்கு வருதல் சிலப்பதிகாரத்தும் கூறப்பட்டுள்ளது.21 பசுமலை, நாகமலை பற்றித் திருவிளையாடல் கூறுகிறது.22 பழங்கால மதுரை நகரின் மேற்கேயே வைகை நதி இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கிருத மாலை என்னும் பெயருடன் இருந்த வளமுடையார் கோயிலருகே பாய்ந்தது (இன்றும் இந்த கிருத மாலை என்ற பெயரிருப்பினும் நதி மண் மேவிப் போயிற்று).

மாலையாக வளைத்துச் சூழ்ந்தது போல, வையை நதி மதுரையைச் சுற்றிப் பாய்வதாகக் கலித்தொகையும் கூறுகிறது.23

இக்கருத்து அறிஞர் மு. இராகவய்யங்காராலும் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.24

மதுரையில் பாயும் வைகை நதிக்கே மூன்று பெயர்கள் வழங்கியிருக்கின்றன. வேகமாகப் பாய்தலால் வேகவதி என்றும், மாகம் (விண்கதி) வாய்ந்ததால் வையை என்றும், தாராதலாற் கிருத மாலை என்றும், வையைக்கு முப்பெயர் இருந்ததை அறிஞர் மு. இராகவ ஐய்யங்கார் பின்வருமாறு கூறுகிறார்.

'இனி வையைக் கரையின் நெடுமால் என்பதற்கு "அந்தர வானத் தெம்பெருமான்" எனக் கூறியதும் கூடலழகர் விஷயமாகவே கொள்ளல் தகும். என்னை? அத்