பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



திருக்கோயிலின் மேல் விமானத்தில் கிடந்த திருக்கோலத்தோடு அப்பெருமான் எழுந்தருளியிருத்தலால் என்க”.

இனி 'வையைக் கரையினெடுமால்’ என்று சிலப்பதிகாரங் கூறுமாறு, கூடலழகர் கோயில் வையைக் கரைக் கணன்றி மதுரைக்கு மேல்புறமுளவே எனின்: மதுரையின் இரு பக்கங்களிலும் அந்நதி சூழ்ந்து சென்றதாகவே, முன்னை வழக்குண்மையால் தென்பக்கத்தும் அதன் போக்கு உள்ளதேயாகும். தென்பாலுள்ள வையைப் பிரிவு இக்காலத்துக் "கிருதமாலை” என வழங்கப் பெற்றுக் கூடலழகர் கோயிற் பக்கத்தோடுகின்றது. மதுரைக் கோட்டையைச் சுற்றி மாலை போல் ஓடுதலின் வையைக்கு இப்பெயர் வழங்கியதென்பர்.

வேகமாதலின் வேகவதியென்றும்
மாகம் (விண்கதி) வாய்ந்ததனால் வையை என்றும்தா
ராக லாற்கிருத மாலைய தாமென்றும்
நாகர் முற்பெயர் நாட்டு நதியரோ

என்பது கூடற்புராணம். கலித்தொகையிலும் (மருதக் கலி 2)

இருநிலம்
தார் முற்றியது போலத் தகைபூத்த வையைதன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகையல்லா னேராதார்
போர் முற்றொன் றறியாத புனல்சூழ்ந்த வயலூரன்

என இவ்வையை மாலை சூழ்ந்துள்ளது போல மதுரையைச் சூழ்ந்து நின்றமை வருணிக்கப்பட்டிருப்பதும் நோக்கத்தக்கது.25

மதுரையின் மேற்குத் திசையில் அமைந்ததாகத் திருமுருகாற்றுப் படை கூறும் திருப்பரங்குன்றம் மலையையும் குறிப்பிடல் தகும்.26

கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் மரப் புணை ஒன்றில் அக்கரையிலிருந்து வையைக் கடந்து,