பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



மதிலுக்கு வெளியே இருந்த புறநகரினது நிலை இதனால் குறிப்பிடப்படுகிறது.

அகழி அமைப்பு

மூன்று பக்கங்களில் வையையே அகழி போல அமைந்தது தவிர, மதிற் சுவர்களை ஒட்டி மற்றோர் அகழியும் மதுரையில் இருந்துள்ளது. அது மிகவும் ஆழமானதாயிருந்தது என்றும் அடிக்கடி மேலெழுந்து துள்ளும் வாளை மீன்களையும், தன் உறுப்புக்களை விரித்து நீரில் தவழுகின்ற ஆமைகளையும் உடையதாயிருந்தது என்றும், கொடிய கூற்றுவனை ஒத்த முதலையையுடையதாயிருந்தது என்றும் இக்காரணங்களால் அவ்வகழியில் இறங்க மண்ணுலகத்தவர் எவரும் துணிய மாட்டாரென்றும் நூல்கள் கூறுகின்றன. அகழி தவிர, அன்னங்களும் தாமரைப் பூக்களும் நிறைந்த பல நீர் நிலைகள் மதிற்புறத்தே காண்போர் கண்களையும் மனத்தையும் கவர்கிற வகையில் இருந்துள்ளன.33

மதில் அமைப்பு

வீரர்களே இன்றியும், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடிந்த நுணுக்கப் பொறிகள் நிறைந்த மதிற் சுவர்கள் மதுரை நகரில் அமைந்திருந்தன்.

மதிலில் இருந்த இயந்திரப் பொறிகளே பகைவர்களை அண்ட விடாமல் விரட்டும் ஆற்றல் பெற்றிருந்தன. அப்பொறிகளில் சில மழுப்படைகளை வீசி எறியும். நஞ்சு தோய்ந்த வாட்படைகளை வீசி எறியும். மும்முனைகளை உடைய சூலப்படைகளை உமிழ்வதுபோல வீசி எறியும். வேலாயுதங்களையும், சக்கரப்படைகளையும் வீசி எறியும். சில நெடிய கொழுப்படைகளை எறியும். கவண் கயிற்றில் கல்லைக் கட்டி எறியும். வாள் போன்ற கூரிய பற்களையுடைய பாம்புப் பொறிகள் நாவை நீட்டிப் பகைவரை வளைத்துப் பிடித்து அழிக்கும். யானைப் பொறிகள்