பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

203


நெஞ்சம் கொண்ட மதுரை நகரக் காவலர் புலி ஒத்த வலிமையை உடைய அவர்கள் திருடர்கள் புரியும் தந்திரங்களை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்பத் தங்களைத் துணிவுடன் ஆயத்த நிலையில் வைத்திருந்தனர். எந்தச் சூழலிலும் கடமை உணர்வு தவறாத அந்தக் காவலர்கள் மெல்லிய நூலேணியைத் தங்கள் அரையிற் சுற்றியபடி திரிந்தனர். நூலேணியை பயன்படுத்துமளவு கட்டடங்கள் உயர்ந்திருந்தன. காற்றிலும் கடிது விரையும் கள்வரைக் கூடத் துரத்திப்பிடித்துப் பிணித்துவிடும் ஆற்றலுடைய அக்காவலரால் மதுரை மாநகர வாசிகளுக்குக் கள்வர் பயம் அறவே இல்லாதிருந்தது.78 நகரத்தின் காவலர் பற்றிய இச்செய்தி,

நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூரல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனக முளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி
ஊர்க்காப்பாளர் ஊக்கருங் கணையினர்79

என்று மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

பலநூல் கூறும் நகரப்பாங்கு

மதுரை நகரமைப்பையே தாமரைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது பரிபாடல் என்பதைக்கண்டோம்.80 மதுரைக் காஞ்சியில் நகரமைப்பின் பல்வேறு நிலைகள் சிறப்பாக அங்கங்கே கூறப்பட்டுள்ளன.

அ. பல கற்படைகளை உடைய மதுரை மதில்கள்

விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை 81