பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


யிருந்துள்ளன. அதற்கென நகரமைப்பில் பூங்காக்களுக்கும் இளமரக்காவுக்கும் உய்யான வனங்களுக்கும் திட்டமிட்டிருந்துள்ளனர். அவை மதுரை நகரத்தினமைப்பில் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் இதைப் பின்வருமாறு கூறும்

கோடையொடு புகுந்து கூடலாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனிக்கின்ற வுறுவெயிற் கடை நாள்
வையமுஞ் சிவிகையும் மணிக்கா லமளியும்
உய்யானத்தி னுறுதுணை மகிழ்ச்சியும் 95

நகரப் பெருவிழா

காவிரிப்பூம்பட்டின நகருக்கு எவ்வாறு இந்திர விழா நகரப் பெருவிழாவாக ஆண்டுதோறும் இருந்து வந்ததோ அவ்வாறே மதுரையில் ஓணநாள்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஓணநாள் விழாவன்று (திருமால் பிறந்த நாள்) நகரின் மறவர் சேரியில் வீரப் போர்களும் விளையாட்டுக்களும் நிறைந்திருந்தன.96 இதிலிருந்து நகரில் படை வீரர் குடியிருப்புக்கள் தனியே(Contonement or Defence area) இருந்துள்ளமையை அறிய முடிகிறது.

மதுரையின் சிறப்பு

மதுரை நகர் அளக்க முடியாத பொருள் வளமுடையது என்கிறார் மாங்குடி மருதனார். தேவர்களும் பூவுலகுக்கு விரும்பி வந்து தேடிக் காணும்படியான நகரம் என்றும் அவரே கூறுகிறார்.97

அளந்து கடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகங் கவினிக் காண்வர
மிக்குப் புகழெய்திய மதுரை 98