பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



மலைநாடாகையால் மதிற் சுவர்கள் உயர்ந்திருந்தன. கோட்டை மதிலுக்கும் மக்கள் வாழ் பகுதிக்கும் இடையே பசுமையான காவற்காடு இருந்தது.30 வீரர்கள் தத்தம் போர்க்கருவிகளுடன் அக்காவற் காட்டில் தங்கியிருந்தனர். பாதுகாப்பு அமைப்புச் சிறப்பாயிருந்தது. அகழி சூழ் வஞ்சி மாநகரம் வானவில் சூழ்ந்தது போல் அழகாயிருந்தது. வெள்ளிமலை நடுவே பிளந்தது போல உயரமான நிலைகளில் சுண்ணாம்புப் பூச்சு நிலவொளி போலிருந்தது.

பலவகைத் தெருக்கள்

காவற்காட்டை அடுத்திருந்த தெருக்களில் கோட்டை வாயிலைக் காத்து வந்த காவலர்கள் வாழ்ந்து வந்தனர். மதில்கள் அகன்றும் நீண்டும் இருந்தன. -

அத்தெருக்களை அடுத்து, மீன் விற்போர், உப்பு விற்போர், கள் விற்போர், இறைச்சி விற்போர், அப்பம் விற்போர், பிட்டு விற்போர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் இருந்தன. பலவகைத் தானியங்கள் விற்போர் தெருக்கள் புறநகரின் ஒரு பகுதியிலிருந்தன. இவை தவிர மேலும் பல்வகைத் தெருக்கள் வஞ்சி மூதூரை அழகு செய்தன.31

வஞ்சி மாநகர் உள்ளே அமைந்திருந்த மறுகுகள், இடங்கள், தொழில்கள், தொழிலாளர்கள் பற்றி விவரித்துள்ளார். சாத்தனார். ஏறக்குறைய மதுரை, புகார் போலவே இந்நகர் வருணனை வருகிறது.32

வேறுபாடு

கோநகரமைப்பு என்கிற முறையில் புகார் மதுரையோடு அதிகம் வேறுபாடுற்றதாகத் தோன்றாவிடினும், மலைநாட்டுக்குரிய மதிலுயரம் போன்ற சில சூழ்நிலைத் தேவைக்குரிய அமைப்புகள் வஞ்சியில் வேறுபட்டிருக்கக் கூடும்.