பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

221


வஞ்சி எது ?

சேரர் தலைநகராகிய வஞ்சி எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் மு. இராகவய்யங்கார் திருச்சிக்கு அருகேயுள்ள கருவூரே வஞ்சி என்கிறார்.

டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி அய்யங்கார், டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆகியோர் சேரநாட்டில் இன்றைய எரணாகுளத்திற்கு வடக்கே தள்ளியும் பொன் னாணியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள சேற்றுவாய் என்னும் துறைமுகம் வரை பரவியும் உள்ள பகுதிகளில் ஒரு கருவூர் உள்ளது. அக்கருவூரே சேரர் தலைநகராகிய கருவூர் வஞ்சி என்கின்றனர். அந்தக் கருவூரின் அருகே திருக்கணாம திலகம் என்னும் இடம் ஒன்று இன்று உள்ளது. அவ்விடமே சிலம்பில் குறிப்பிடப்படும் குன வாயில் கோட்டமாக இருக்கக் கூடும் என்று டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் கருதுவதால் அந்த இடத் தைக் கிழக்கு மதில் வாயிலாகக் கொண்டு சேரர் கோநகரம் இருந்த இடம் உய்த்துணரப்படுகிறது.

பெரியாறு கடலில் கலக்கும் சங்கம முகமாகிய அழிக்கோடுதான் முசிறியாயிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்திலிருந்து வடமேற்கில் இரண்டு கல் தொலைவிலுள்ள ‘சேரமான் பிரம்பா’ என்னும் இடமும் திருவஞ்சைக் குளமும் உள்ளது. இன்னும் சிறிது தொலைவில் கொடுங்களுர்க் கோயில் என்னும் இடமுள்ளது. அக்கோயிலிலிருந்து சிறிது தொலைவில் கருவூர்வடக்கு-கருவூர் தெற்கு என இரு பகுதிகள் உள்ளன. வஞ்சி என்ற பெயரும் கருவூர்ப்பட்டினம் என்ற பெயரும் கூட இதே இடத்திற்கு வழங்குகின்றன.

இப்பகுதியே வஞ்சி மாநகரம் இருந்த இடமாயிருத்தல் வேண்டும் என்பர். சேரன் செங்குட்டுவன் நீலகிரி வழியே இமயமலைக்குக் கல் எடுக்கச் சென்ற வழியும்