பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

229


உள்ளது. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள இந்நகரங்களின் அமைப்பு முறையும் சமுதாய வாரியான குடியிருப்புகளும் கூட இதே வகையில்தான் உள்ளன.

சம்பிரதாயமான பிரம்ம சத்திரிய வைசிய எனத் தொடங்கும் சாதி முறைப்படியோ, நால்வருண முறைப்படியோ, சமுதாய அமைப்புகள் பழைய காவிரிப் பூம்பட்டின நகரிலும், மதுரையிலும் இருந்ததாகத் தோன்றும்படி கூறாமல், தொழில் முறை இயைபுக்கேற்ற வகையில் சங்க நூல்களும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் கூறிய இந்நிலை பின்நாளில் காவிய, புராண, பிரபந்தக் காலங்களில் மெல்ல மெல்ல மாறியிருப்பதைக் காண்கிறோம்.

வெண்பா உத்தமசாதிக்கு, ஆசிரியப்பா அடுத்த சாதிக்கு என்று பிற்காலப் பட்டியல் நூல்கள் பாட்டுகளையும் சாதி சமுதாயங்களையும், முடிச்சுப் போட்டதைப் போல எல்லாக் காப்பியங்களிலும் புராணங்களிலும் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற பெயர்களில் விரிவான பகுதிகள் சாதி அடிப்படையில் குடியிருக்கும் முறைகள் பழைய நகரங்களில் இருந்தாற் போல வருணனைகள் இடம் பெறத் தொடங்கி விட்டன. நாளடைவில் இம் முறை விவரிப்போ புதிய காப்பியங்களிலும், புராணங்களிலும் ஒருவகை மரபு போலவே ஆகிவிட்டது. கம்ப ராமாயணம், திருவிளையாடற் புராணம், காவிரிப்பூம் பட்டினம் பற்றிய சில புராண நூல்கள், பெரிய புராணம் ஆகியவற்றில் இம்முறை வந்துவிட்டது.

சங்க நூல்களிலும், பழங் காப்பியங்களிலும் கோநகர அமைப்புகளில் அந்தந்தச் சமுதாய மக்கள் வசித்த முறை அவரவர் தொழில்களின் அடிப்படையில் ஒரளவு நாகரிகமாகக் கூறப்பட்டதற்கும் பிற்காலக் காப்பியங்களிலும்,

ப-15