பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


ஓலைகளையும் கொண்டு கூரை வேய்ந்து குடிசை யமைத்து, முட்செடிகளையும் கிளைகளையுங் கொண்டு வேலி கட்டிப் பத்திரமான புகலிடத்தைப் படைத்துக் கொண்டான். பின்னர் நெருப்பின் பயனையறிந்தான். கரைந்து நெகிழ்ந்துவிடும் களிமண், நெருப்பினால் உறுதி பெற்றுக் கடினமாகிவிடுவதையுணர்ந்தான். தனக்கு வேண்டிய சட்டிகள்,பானைகள் போன்ற பாத்திரங்களைப் படைத்துக்கொண்டான். செங்கற்கள் உற்பத்தி செய்யவும் அறிந்தான். படிப்படியாகக் களிமண், ஒலைக்குடிசைகள் கல்வீடுகளாய் மாறின. பின்னர் அடுக்கு மாடிவீடுகளும் மாளிகைகளும் தோன்றின.

கட்டடம், வீடு, அரண்மனை, மாடமாளிகைகள் கோயில்கள் எல்லாமே இப்படிப் படிப்படியாக ஏற்படத் தொடங்கியவைதான்.

முதற் கலை

அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அழகுக் கலை களில் கட்டடக் கலையையே முதலாவதாக வைத்து எண்ணுகிறார். அதற்குக் காரணமும் கூறுகிறார்.

மனிதன் மிகப் பழைய காலத்திலே காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும், உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக்கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே மனிதன் விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும் உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்துகொண்டான்.

வீடு கட்டி வசதி செய்துகொண்டு வாழத் தொடங்கிய மனிதன் தன்னைப்போல் பிறர் பலருடனும் சேர்ந்து கொண்டு வாழவும் தொடங்கினான்.