பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

என்ற எண்ணத்தை உண்டாக்கின. படை, பாதுகாப்பு, கோட்டை, கொத்தளங்களைக் கட்டும் நிலை வந்தது. பாதுகாப்புக்கான கட்டடக் கலை வளர வாய்ப்புகள் ஏற்பட்டன.

சங்க காலம்

கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையுள்ள காலத்தைச் சங்க காலம் என்று கூறுவர் தமிழறிஞர்.8 இதில் முன் பின்னாக எண்ணும் பலவகைக் கருத்துக்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. 'சங்ககாலம்' என்பது 'இந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை' என்று வரையறுத்து அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிடுவதற்கு ஏற்ற மறுக்க முடியாத அடிப்படைச் சான்றுகள் எவையும் கிடைத்தில என்பதனால் இலக்கியங்களில் கிடைக்கும் ஒரு சில சான்றுகளையும் அநுமானங்களையும் கொண்டு முடிவு செய்யப்பட்டுப் பல்வேறு கருத்துக்கள் சங்ககாலம் பற்றித் தமிழறிஞர்களால் கூறப்படுகின்றன. இங்கும் அப்படிக் கொள்வதே தக்கது.

இச்சங்க காலத்தில் தமிழர் வாழ்வியல் சிறந்திருந்தது. முடியாட்சி முறையில் அரசர்கள் வளம் சுரக்கும்படி நாட்டை ஆண்டனர். பாசனம் செய்து பருவம் தெரிந்து பயிரிட்டு வளம் பெருகினர் வேளாளர். பல்வேறு வகைக் கருவிகள்-ஆடை அணிகள் உருவாயின.

பிற நாட்டுடன் வாணிபத் தொடர்பும் கப்பல் போக்கு வரவும் ஏற்பட்டன. இலக்கியங்களும் பிறவகை நூல்களும் வளர்ந்தன. புலவர்கள் பெருகினர். கோயில்கள் பெருகின. முத்தமிழும் வளர்ந்தன. மன்னர் அரண்மனைகளும், மக்கள் வீடுகளும் நகர்கள் அமைப்பும், நானிலப் பகுப்பும் உண்டாயின. போர்களை எதிர்கொள்ள வலுவான அரண்மனைக் கோட்டைகளும் அகழிகளும் கட்டப்பட்டன. பல சிறப்புக்களும் பெருகி வளர்ந்த காலமாக