பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

31

இது இருந்தது. தமிழரின் பொற்காலம் என இதனைக் கூறலாம்.9

கட்டடக் கலையின் தோற்றம் புதிய கற்காலத்தில் என்றால் அதன் வளர்ச்சியும், எழுச்சியும் இக்காலத்திலே தான் என்று கூற வேண்டும். குடிமக்கள் வீடுகள் மட்டு மின்றி மாடமாளிகைகளும்,கூட கோபுரங்களும் கோட்டை கொத்தளங்களும், அகன்ற பெரிய அரச மாளிகைகளும், கூத்தரங்கங்களும் கட்டப்பட்டன.

கோயில்கள்

எண்ணற்ற பெருங்கோயில்களைத் தமிழர்கள் கட்டினார்கள். வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட நூற்றெட்டுத் திருப்பதிக் கோயில்களும், சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்தைந்தும்10 இருந்தன.

கொடிக்கூடம், மரநிழல், காவணம், குடில், மண்தளி, சுடுமண் தளி, மரப்பலகைகளால் சமைத்த அம்பலம், குடைவரை, ஒற்றைக் கற்றளி, கருங்கற்கோயில் என்று கோயில்கள் படிப்படியாக வளர்ந்தோங்கின.11

மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் புணரியல் விதி வகுக்கும் நூற்பாவால் 'கோயில்' என்னும் சொல்லுக்குப் புண்ர்ச்சி விதி கூறப்பட்டுள்ளது.

இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்.12

தமிழகக் கோயில்கள் பழம் பெரும் நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளக்கும் சிறப்பை உடையவை.

திருவரங்கம், தில்லை, மதுரை, இராமேச்சுவரம் போன்ற ஊர்களில் உள்ள பெரிய கோயில்களின் மாட்சி கோயிற் கட்டடக்கலையின் பெருமைக்கு எடுத்துக்காட்டுக்களாக விளங்கக் கூடியவை.