பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

நளம், மயம். அனுமான், பானு, கற்பாரியம், இருப்பிம், மானசாரம், வத்து வித்யாபதி, பராசாரியம், அரிடிகம், சயித்தகம், வாத்துபோதம், வித்தாரம் ஐந்திரம், வச்சிரம், செளமம், விச்சுவகாசிபம், மகாதந்திரம், விசாலம், சித்திரம், காபில காலயூபம், நாமசங்கிதை, சாத்திகம், விச்சுவபோதம், அதிசாரம், வெகுசுருதம், மானபோதம் என்னும் முப்பத்திரண்டு நூல்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி4 விவரிக்கிறது.

இம்முப்பத்திரண்டு நூல்களுள் மயன் இயற்றியதாக வழங்கும் சிற்ப சாத்திரம் எனப்படும். 'மயம்' ஒன்றே தமிழில் செய்யுள்களின் வடிவில் வழங்கி வருகிறது. நானூற்றுப் பதினைந்து விருத்தங்களுக்கு மேலாக இந்நூலில் உள்ளன. சிற்பநூல் பின்வருமாறு தொடங்குகிறது.

வேதநான் மறைகளாகி விளங்கும் மும்மூர்த்தியாகிப்
பூதலந் தனைப்படைத்த புண்ணியன் தாளைப் போற்றித்
தீதிலா மயனார் சொன்ன சிற்ப சாஸ்திரமாம் நூலை
நீதியாய்த் தமிழினாலே நிலைபட உரைக்கலுற்றேன்5

மனையடி சாத்திரம் இவ்வாய்வுக்கு எவ்வகையில் பயன்படும் என்பதை டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மனைநூல் பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"மனித வாழ்க்கையின் நாகரிக வளர்ச்சியை, வீடு கட்டி மனிதன் வாழ்ந்தது நிரூபிக்கிறது. தமிழர் வீடு கட்டும்போது நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். நல்ல மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். நல்ல நாள் பார்த்துக் கட்டத் தொடங்கினர்."