பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

லுமே அழகு செய்ய வழிகள் இருந்தன. மூன்று கூறுபாடுகள் தவிர்க்க இயலாதவை என்பதையும் மேலே கூறிய அமெரிக்கக் கட்டடக் கலை நிபுணர்களே குறிப்பிடுகின்றனர்.

"கட்டடக் கலைக்கு மூன்று கூறுபாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு கட்டடம் எதற்காகக் கட்டப்படுகிறதோ அதற்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். பயன்படு பொருள்கள் கட்டமைப்பு ஆகியன உறுதியாகவும் பொருத்தமாகவும் நீடித்து நிற்பவை யாயும் இருக்க வேண்டும். அதன்பின் கலையாகவும் இருக்கவேண்டும்”.3

இக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் காண்கையில் பழந்தமிழர் கட்டடக்கலையின் சீரும், சிறப்பும், பொருத்தமும் நன்குவிளங்குகின்றன. பழந்தமிழர் கட்டடங்கள் அவற்றுக்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்தன. உறுதியாகவும், நீடித்து நிற்பவையாகவும், பொருத்தமாகவும் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலே அவை கலையாகவும் இருந்தன என்பதை மறப்பதற்கில்லை.

கிரேக்க, உரோமானியக் கட்டடக் கலைகளின் கூட்டு வளர்ச்சியின் விளைவாகவே அதன் பின் மேற்கு ஐரோப்பாவில் கோதிக்கட்டடக் கலை உருவாயிற்று. பழைய கட்டடக் கலையில் (Classical Architecture) இது இன்றியமையாதது.

அதே போல் பழந்தமிழர் கட்டடக் கலைகளின் தொடக்க விளைவான கோயில், கோட்டை, கொத்தள அமைப்புக்களே பின்னாளில் மாபெரும் கோயில்களுக்கான அழகியற் கட்டடக் கலையை உருவாக்கிற்று என்று கூறுதல் பொருந்தும், பாதுகாப்புக்கான கோட்டை, கொத்தளம், மதில், அகழி ஆகியவற்றைக் கட்டி அமைப்