பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7

பதில் தமிழர்கள் தந்நிகரற்று விளங்கியுள்ளனர். பாதுகாப்புத் தொடர்பான கட்டடக் கலைச் சொற்களையே அகராதியாகத் தொகுத்துப் பார்க்கமுடியும். அவ்வளவிற்கு அவை செம்மையாகவும், சிறப்பாகவும் கட்டப்பட்டுள்ளன. பொறியியல் நுணுக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டடக் கலையைப் பழந்தமிழர் இலக்கியங்களுடன் சார்த்தி ஆராயும்போது மூவகைப் பிரிவுகள் தெரிகின்றன. தனியார் வீட்டுக் கட்டடக் கலை (Domestic Architecture) கோயில் அல்லது அரண்மனைக்கட்டடக் கலை (Temples and Royal Buildings) கட்டடக் கலை (Defence Architecture or Military Engineering) என்பனவே அவை. தனியார் கட்டடக் கலை பற்றி அறிய முடிந்ததைவிட இரண்டாவது வகையான கோயில்கள், அரண்மனைகள் பற்றியே அறியச் சான்றுகள் மிகுதி யாகக் கிடைக்கின்றன. கோயில் என்ற சொல்லே அரசனிருக்கை, இறைவனிருக்கை, இரண்டிற்கும் பொதுவாக வழங்கி வந்திருக்கிறது. பாதுகாப்புக்குரிய இடம் என்ற பொருளும் கிடைக்க ஏற்ற அரண் என்ற முதற்சொல்லுடனேயே அரசன் அல்லது ஆட்சியாளரின் உறைவிடம் குறிப்பிடப்படுகிறது. எனினும், கோட்டை, கொத்தளங்கள், பல்வேறு மதில்கள், அவற்றில் அமைக்கப்பட்ட படை நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே மூன்றாவது கட்டடக் கலைப் பிரிவாகப் பாதுகாப்புக் கட்டடக்கலை என ஒரு பிரிவு மேற்கொள்ளப்பட்டது. படையாளர் பொறியியல் என்ற ஒரு பிரிவே பின்னாளில் ஏற்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு பார்த்தால் பாதுகாப்புக் கட்டடக் கலையின் இன்றியமையாமையை ஒரளவு விளங்கிக் கொள்ள முடியும். கட்டடங்கள் கட்டப்படுவதையும், மனை அமைப்பதையும் பற்றிய விவரங்கள் சங்க நூலாகிய பத்துப்பாட்டில் நெடுநல்வாடை தொடங்கிப் பின்னாளில் மனையடி சாத்திரம் வரை விரிவான செய்திகளைக் காணமுடிகிறது.