பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


பொறியியல் வல்லுநர்

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து 6

என்று மேலும் கூறப்படுகிறது.

இன்றைய பொறியியல் வல்லுநர்கள் (Construction Engineers) போல் அன்றும் கட்டடக்கலைத் திறன் வல்ல நூலறி புலவர் இருந்தனர் என்பதை நெடுநல்வாடையிலிருந்து அறிய முடிகிறது. கட்டடக்கலை நூல்களும் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.

சிற்ப நூலை (கட்டடக் கலை நூலை) நன்கு துணுக்கமாக அறிந்த புலவர்கள் நூலை நேரே பிடித்துத் திசைகளை மாறாது குறித்துக்கொண்டு அவ்வத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப் பார்த்து அரச மரபினருக்கு ஏற்ப மனையை வகுத்தனர்.

என்கிறார் நக்கீரர்.

நூலைப்பிடித்து அளவும் திசையும் பார்க்கும் வழக்கம் இன்றும் கொத்தனார்களிடையே உள்ளது. வாயுமூலை, ஈசானியமூலை, அக்கினிமூலை, நிருதிமூலை 7 என்று மனைநூலில் திசைகளும் தெய்வங்களும் கூறப்படுவது இங்கே நினைவுகூரத் தக்கது.

இப்பகுதிக்கு உரை எழுதுங்கால் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் 'மனை வகுத்து’ என்பதற்கு மட்டும், "மனைகளையும் வாயில்களையும் மண்டபங்கள் முதலியவற்றையும் கூறுபடுத்தி”8 என்று பதசாரம் எழுதுகிறார். அரசர்க்குரிய கட்டடத்தின் உட்பிரிவுகள் கூறப்படுகின்றன. “மனையை வாயில், மண்டபம், முற்றம், கூடம் முதலியவாகக் கூறுபடுத்து" 9என இன்னும் தெளிவாக விளக்குகிறார் வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்.