பக்கம்:பழைய கணக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

“அப்பளத்துக்கான மாவு தயார் செய்கிற இடத்தைப் பாலக்காட்டில் ஒரு சமயம் பார்த்தேன். அதிலிருந்து எனக்கு இந்த அப்பளத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டது.”

“அங்கே ஒரு ஆள் தன் அழுக்குக் கால்களால் அப்பள மாவை மிதித்துக் கொண்டிருந்தான். அந்த இடமும் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தது முதல், இனி கடையில் அப்பளம் வாங்கிச் சாப்பிடுவதில்லை” என்ற முடிவெடித்து விட்டேன். இப்போதெல்லாம் நான் அப்பளம் சாப்பிடுவதென்றால் ஒன்று அது என் வீட்டில் தயார் செய்ததாக இருக்க வேண்டும். அல்லது கி. ஆ. பெ. விசுவநாதம் வீட்டிலிருந்து வரவேண்டும். இவற்றைத் தவிர வேறு எந்த அப்பளத்தையும் சாப்பிடுவதில்லை. எனவேதான் இந்தக் கல்யாணத்தில் யாருக்கும் அப்பளம் போடக் கூடாது என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டிருந்தேன். ஆனால் என்னையும் மீறி என் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது அதனால்தான் இங்கு வந்து பார்த்தேன். பாத்தீங்களா? நான் நினைத்தது போலவே இங்கு நடந்திருக்கிறது?” என்றார்.

நாயுடுவின் பிடிவாதம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே, ஆனாலும் ஒரு கலியாணத்தில் அப்பளம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவேதான். நாயுடு குடும்பத்தினர் அவருக்குத் தெரியாமல் அப்பளத்தைக் கடையில் வாங்கி வந்து பொரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சில காலம் கழித்து, மீண்டும் நான் நாயுடுவின் பங்களாவுக்குப் போயிருந்தேன். சாப்பிட்டு முடிந்ததும் மேஜையிலிருந்த பழத் தட்டைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் தயக்கம் காட்டினேன்.

நாயுடுவே ஒரு வாழைப் பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, “இதைச் சாப்பிட்டு விட்டு இது என்ன ஜாதிப்பழம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

சாப்பிட்டுப் பார்த்தேன். ரொம்பவும் ருசியாக இருந்தது.

“ரஸ்தாளி” என்றேன்.

உடனே நாயுடு, “உங்களுக்கு வடஆற்காடு மாவட்டமா?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/100&oldid=1146087" இலிருந்து மீள்விக்கப்பட்டது