பக்கம்:பழைய கணக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏவி. எம். சொன்ன வார்த்தைகள்

வெள்ளி மணி முதல் மூன்று இதழ்களைக் கண்ட பிறகு கல்கியின் மன நிலையில் பெரும் மாறுதல் நிகழ்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. மிகுந்த உற்சாகத்தோடு, “அப்படிச் செய்ய வேண்டும்; இப்படிச் செய்ய வேண்டும்” என்று ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஏற்பட்டிருந்த இந்த மாறுதலுக்கு என்ன காரணம்?

அவருக்கும் திரு சதாசிவத்துக்கும் உள்ள ஸ்தாபன உறவில் லேசாக ஒரு விரிசல் ஏற்பட்டிருந்ததும், அந்த விரிசலின் இடைவெளி வரவர அகலப்பட்டுக் கொண்டு போன நேரத்தில், வெள்ளி மணி தோன்றியதால் வெள்ளிமணியின் எதிர்காலத்தையும் தம்முடைய எதிர்காலத்தையும் அவர் உள் மனம் அடிக்கடி ஐக்கியப் படுத்திப் பார்த்துக் கொண்டதும்தான்.

அப்போது ஏவி. எம். ஸ்டுடியோ தேவகோட்டையில் இருந்தது.

பர்ணசாலைகள் போல் சிறு சிறு குடில்கள் போட்டு எளிய முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் உலாவிய போது ஒரு சினிமா ஸ்டுடியோவில் இருக்கிறோம் என்கிற நினைப்பே உண்டாகவில்லை.

எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் திரு ஏவி. எம். அவர்கள் தம் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருத்தார். முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பிதழ் வந்தபோது எங்களுக்கு அது வியப்பாக இல்லை. காரணம், முதல் நாளே கல்கி அது பற்றி எங்களிடம் சொல்லி விட்டார். “அழைப்பு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். நாம் மூவரும் அடுத்த வாரம் தேவகோட்டையில் நடைபெறும் அந்தத் திருமணத்துக்குப் போகிறோம்” என்றார்.

முகூர்த்தம் முடிந்ததும் நாங்கள் மூவரும் ராமராஜ்யா தமிழ் டப்பிங் படம் பார்ப்பதற்கு ஏவி. எம். ஏற்பாடு செய்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/111&oldid=1146098" இலிருந்து மீள்விக்கப்பட்டது