பக்கம்:பழைய கணக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மலர் உண்டு. நான் அதற்கு ஒரு கதை எழுதித் தருகிறேன்.ஏவி. எம்.மைப் போய்ப் பார், பணம் தருவார்” என்றார்.

கல்கி சாந்தி நிகேதன் புறப்பட்டுப் போனதும் நான் பாலாஜி நகரிலிருந்த திரு ஏவி. எம். அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்.

“வெள்ளி மணி ரொம்ப நன்றாயிருக்கிறது. கல்கி உங்களிடம் ரூபாய் பத்தாயிரம் தரச் சொல்லியிருக்கிறார். இப்போது ஐயாயிரம் தருகிறேன்” என்று கூறி நோட்டுக் கற்றைகளை ஒரு சின்னப் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பெட்டியை என்னிடம் தந்தார். “பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறித் தம்முடைய காரிலேயே என்னை அனுப்பி வைத்தார்.

“கையெழுத்து எதுவும் வேண்டாமா?” என்று கேட்டேன் நான்.

“உங்களைப் பற்றி கல்கி என்னிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் நவகாளி செல்லும் போது ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினராம். அந்த ஆயிரத்தில் நானுாற்றுச் சொச்சம் ரூபாயைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டதோடு பயணிச் செலவு விவரங்களையும் உடனே கணக்கெழுதிக் கொடுத்து விட்டீர்களாம். உங்களைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார். எனக்கு அவருடைய இந்த ஸர்ட்டிபிகேட் ஒன்றே போதும். உங்களை நான் நம்புகிறேன்” என்றார் ஏவி. எம்.

ராஜா ஸர் முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான கமர்ஷியல் அச்சகம் அப்போது அரண்மனைக்காரன் வீதியில் இருந்தது. வெள்ளி மணி அங்கேதான் அச்சாகிக் கொண்டிருந்தது.

பெரிதாகத் திட்டமிட்டு வெள்ளி மணி தீபாவளி மலர் முழுதும், ஆர்ட் காகிதத்திலேயே அச்சிட்டோம். வியாபாரத் திறமையோ அனுபவமோ இல்லாத காரணத்தாலும் உற்சாக மிகுதியில் எல்லாம் விற்று விடும் என்ற அசட்டு நம்பிக்கையினாலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டு விட்டோம்.

மலர் நன்றாகவே அமைந்தது. ஆனால் ஆயிரம் பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை. பெருத்த நஷ்டம். பாக்கி அதிகம் சேர்ந்து விடவே பணம் கொடுத்தால்தான் இனி அச்சிடுவோம் என்று கமர்ஷியல் பிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/113&oldid=1146100" இலிருந்து மீள்விக்கப்பட்டது