பக்கம்:பழைய கணக்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

“நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!” என்றார் அவர்.

“ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.

“ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கும். அதுவும் அம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.

அவ்வளவுதான் ; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா? அதிலிருந்து என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலேந்ததன் பயனாக என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழுநீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த என் லட்சியம், செயல் பூர்வமாக நிறைவேறப் போகிற காலம் வந்து விட்டது போல் ஒரு பிரமை. என் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்த கணமே, காவிரிக்கரை கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில், ஷேக் சின்ன மெளலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைக் காட்டிலும் ‘நம் ஊர்த் திருமணம் ஒன்றை நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்ட போது நமக்குக் கிடைக்கும் வேடிக்கையும் தமாஷூம் அமெரிக்காவில் நம் கலியாணத்தை நடத்துகிற போது அவர்களுக்கு ஏற்படலாம்’ என்று தோன்றியது. இந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான், பரணிதரனோடு இதே பேச்சுதான். நம் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/120&oldid=1146109" இலிருந்து மீள்விக்கப்பட்டது