பக்கம்:பழைய கணக்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சாதாரணமாக ஒரு கலியாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கே போய் ஆடம்பரக் கலியாணம் ஒன்று நடத்துவதென்றால் அது அத்தனை எளிதான காரியமா? கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கலியாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அத்தனை கவலை இருந்திருக்காது. கதைக்கு ‘வாஷிங்டனில் திருமணம்’ என்று பெயர் கொடுத்து விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி, வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதுகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசிவரை சஸ்பென்ஸில் வைத்திருந்து முற்றும் போடுகிறபோதுதான் என் பெயரையும் வெளியிட்டேன்.

பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாரா வாரம் திரு கோபுலுவின் உயிர்ச் சித்திரங்கள் இந்தக் கதைக்குத் தனிச் சிறப்பும் முழு வெற்றியும் தேடித் தந்தன.

இன்னொரு விஷயம்.

“இந்தத் திருமணத்தை வாஷிங்டனில் நடத்தப் போகிறேன். அங்கேதான் பொடோமாக் நதியும் அப்ராஹாம் லிங்கன் மண்டமும் டைடல் பேஸின் நீர்த்தேக்கமும் இருக்கின்றன. ஊர்வலம் செல்ல வீதிகள் விசாலமாயிருக்கின்றன. அப்பளம் உலர்த்துவதற்கு வசதியான ஆர்ட் காலரி மொட்டை மாடி இருக்கிறது. பாலிகை விடுவதற்கும் ஜானவாச ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்ற இடம் வாஷிங்டன் நகரம்தான்” என்று நான் கூறியபோது, “ரொம்ப சரி, அங்கேயே நடத்துங்கள். ஆனால் செலவையெல்லாம் ராக்பெல்லர் சீமாட்டி தலையில் போடுங்கள்” என்று எனக்கு யோசனை கூறி உதவியவர் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்தான். அவர் யோசனைப்படியே ராக்பெல்லர் செலவிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன். வாஷிங்டனில் திருமணம் எழுதுவதற்கு முன் நான் அமெரிக்காவை பார்த்ததில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த நாட்டையும் வாஷிங்டன் நகரையும் போய்ப் பார்த்தேன். திருமணம் நடந்த ஜார்ஜ் டவுன், சாஸ்திரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, பாலிகை விட்ட டைடல் பேஸின், அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி எல்லாவற்றையும் நேரில் பார்த்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. இனி அந்த மாதிரி ஒரு கதை எழுத முடியுமா? சந்தேகம்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/121&oldid=1146111" இலிருந்து மீள்விக்கப்பட்டது