பக்கம்:பழைய கணக்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதல் சம்பாத்தியம்

பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்டு, வேலையில்லாமல் வாடிக்கொண்டிருந்த இளம் பிராயத்தில் குடுமி வைத்திருந்தேன். முடிச்சு ரொம்ப கனமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். அந்தக் குடுமி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பெரிய இடையூறாக இருந்தது. குடுமியை எடுத்துவிட்டு மற்ற சம வயதுத் தோழர்களைப் போல் கிராப்பு வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ விரும்பினேன். ஆனால் அதற்கு வேண்டிய தைரியமோ, சுதந்திரமோ எனக்கு இருக்கவில்லை. என் அப்பா சம்ஸ்கிருத பண்டிதர். ஆசார சீலர். கிராப்பு வைத்துக் கொள்வதை மன்னிக்க முடியாத குற்றமாய்க் கருதியவர்.

வில்லிவாக்கத்திலிருந்து பெங்களுருக்கு எங்கள் கிரிக்கெட் குழு மேச் ஆடப் போயிற்று. அந்தக் குழுவில் நான்தான் விக்கெட் கீப்பர். குடுமி வைத்திருந்ததால் பெங்களுர் மேச்சில் என்னை ஒதுக்கிவிட்டு, எனக்குப் பதிலாக வேறொரு பையனை அழைத்துச் சென்றார்கள். இதனால் பெங்களுர் போகத் தடையாயிருந்த குடுமி மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அப்பா எங்காவது, எப்போதாவது வெளியூர் போகிற சமயத்தில். மொட்டையடித்துக் கொண்டு விடுவதென்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் அப்பா வெளியூர் போகிற வழியாகவும் இல்லை. இரவும் பகலும் என்னை வாட்டி எடுத்த குடுமி விசாரம் தீர்வதாயுமில்லை.

ஒரு நாள் துணிந்து குடுமியை எடுத்து விடுவதென்று தீர்மானித்தும், அதை நிறைவேற்றுவதற்குரிய பொருளாதார வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/125&oldid=1146116" இலிருந்து மீள்விக்கப்பட்டது