பக்கம்:பழைய கணக்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

ராமசாமி என்றொரு டாக்டர் இருந்தார். தினமும் அவர் டிஸ்பென்ஸரியில் போய் உட்கார்ந்திருப்பது என் பொழுது போக்கு. என்னிடம் அவருக்கு அன்பும் அக்கறையும் உண்டு. பிரியமாக எப்போதாவது நாலணா, எட்டணா காசு கொடுப்பார். என் குடுமியை அவ்வப்போது பாராட்டி ரொம்ப லட்சணமாக இருப்பதாகக் கூறுவார்.

ஒருநாள் அவர் கொடுத்த எட்டணாவை எடுத்துக் கொண்டு குடுமிக்கு விமோசனம் அளிக்க ஸலூனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.

எதிரே பாஸ்கர சாஸ்திரிகள் (அவரை ராமாயன சாஸ்திரிகள் என்று அழைப்பார்கள்) என்பவர் வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “பையா, உன்னத்தான் தேடிக்கொண்டு வருகிறேன்...” என்றார்.

“என்ன விஷயம்?” என்று கேட்டேன்.

“இன்று இரவு பெருமாள் கோவில் மண்டபத்தில் என் ராமாயண உபந்நியாசம் நடக்கிறது. வால்மீகி ராமாயணம் புத்தகம் இருக்கிறது. அந்த சுலோகங்களை நீதான் இன்று படிக்க வேண்டும். நான் அவற்றுக்கு அர்த்தம் சொல்லி உபந்நியாசம் நிகழ்த்துவேன்” என்றார்.

அவருக்கு வாடிக்கையாக சுலோகங்கள் படிக்கும் பண்டிதருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக என்னைப் படிக்கும்படி அழைத்தார்.

எனக்கு சுலோகங்கள் படிக்கும் அளவுக்குப் புலமையோ ஆற்றலோ கிடையாது. சம்ஸ்கிருதம் சுமாராகத்தான் படிக்கத் தெரியும். அவர் எண்ணுகிற அளவுக்கு வேகமாகவும் அட்சர சுத்தமாகவும் படிக்க முடியுமா என்பது சந்தேகம். நான் தயங்கினேன்

“பயப்படாதே; புத்தகம் தருகிறேன். மத்தியானமே சுலோகங்களை ஒருமுறை படித்து வைத்துக் கொள். ராத்திரி தடங்கலில்லாமல் சுலபமாகப் படித்து விடலாம்” என்று தைரியம் கூறினார்.

“சரி” என்று ஒப்புக் கொண்டு விட்டேன், இந்த நேரம் பார்த்துத் தலையை மொட்டை அடித்துக் கொண்டால் விகாரமாயிருக்கும். ராமாயணம் படிக்கிற போது குடுமியோடு படித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே, முடியெடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/126&oldid=1146117" இலிருந்து மீள்விக்கப்பட்டது