பக்கம்:பழைய கணக்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

பெரிய வீட்டை விற்றுக் கடனைத் தீர்த்தது போக மிஞ்சியிருந்த பணத்தில் எதிர்மனையில் சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு குடிபெயர்ந்தோம்.

பெரிய வீடு போய்விட்ட துக்கம் எல்லோரையும் கவ்விக் கொண்டது. யாரையோ பறிகொடுத்து விட்டது போல் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். ரொம்ப நாள் வரை அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருந்ததால் அந்த இழப்பு என்னைப் பாதிக்கவில்லை. மாறக நாகரிகமான வராண்டாவுடன் கூடிய புதுவீடு பற்றிக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தேன். வாசல் படிக்கு மேல் எனக்குத் தெரிந்த இங்கிலீஷில் இரண்டு ‘எல்’ போட்டு wellcome என்று எழுதினேன்.

அப்புறம் ஏழெட்டு ஆண்டுகளே அந்தப் புது வீட்டில் வாழக் கொடுத்து வைத்திருந்தோம் கடைசியில் அதையும் விற்றுவிட்டோம். இதற்கிடையில், ஒரு சமயம் என் தாய் தந்தையர் என்னைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார்கள். அப்போது நான் சந்திரோதயம் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். சௌந்தர்யா நர்ஸரியில் ஒரு தென்னம் பிள்ளை வாங்கிப் பெற்றேர்களிடம் கொடுத்து “அப்பா இதைக் கொண்டு போய் கிராமத்தில் நம் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து விடு” என்று சொல்லி அனுப்பினேன். அப்பாவும் அதை ஊரில் கொண்டு போய் வைத்து கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். ஏராளமாய் உப்பு கொட்டினர். சுற்றிலும் பாத்தி கட்டித் தண்ணீர் ஊற்றினர். கன்று நன்கு வளர்ந்து பெரிய மரமான போதிலும் பலன் கிடைக்கவில்லை. தென்னைக்குள் வண்டு புகுந்து கொண்டு குருத்துக்களைத் கத்தரி போட்டு வெட்டிக் கொண்டிருந்தது. “இவ்வளவு பாடுபட்டு வளர்த்தேனே, ஒரு தேங்காய் கூடக் கிடைக்கவில்லையே!” என்று அப்பா சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். மரத்திலிருந்து வண்டை அப்புறப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்தார். குடைக் கம்பிகளால் குத்திக் குத்திக் கம்பிகள் கோண மாணாவென்று வளைந்து போனதுதான் மிச்சம்!

அவர் எனக்கு எழுதும் கடிதங்களிலெல்லாம் தென்னை மரம் குல போடாமல் மோசம் செய்து விட்டது பற்றியும், வண்டின் அட்டுழியம் பற்றியும் பத்தி பத்தியாய் விவரித்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் அந்த வீட்டையும் விற்றுவிட வேண்டிய நிலை வந்தபோது அப்பாவுக்குத் துக்கம் தாங்கவில்லை. பாடுபட்டு வளர்த்துப் பலன் எதுவும் பெறாத நிலையில் அந்தத் தென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/129&oldid=1146120" இலிருந்து மீள்விக்கப்பட்டது