பக்கம்:பழைய கணக்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

மரத்தையும் சேர்த்து, விற்க வேண்டியிருக்கிறதே என்று குமுறிப் போனார்.

பெரிய வீடும் போய், தென்னை மரத்து வீடும் போய்விடவே அந்த வேதனையோடு என் தாய் தந்தையர் கிராமத்தில் வசிக்கப் பிடிக்காமல் சென்னைக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இதெல்லாம் பழங்கதையாய்ப் போய்ப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.

சில வருஷங்களுக்கு முன் ஒருநாள் நான் என் கிராமத்திலுள்ள விநாயகரைத் தரிசிக்கப் போயிருந்தேன். ஊரை நெருங்கும் போது சிறுவயதில் நான் அங்கு விளயாடியதெல்லாம் நினைவுக்கு வந்தன. ரோடு ஓரத்தில் புங்க மரத்தில் ஏறி குரங்காட்டம் ஆடியது. சிற்றேரிக் கரை, கருடகம்பம், குப்பு செட்டிக் கடை, அரசமரத்தடியில் நரிக்குறத்தியிடம் கையில் பச்சை குத்திக் கொண்டது, பெருமாள் கோயில் இடிபாடு, ‘விசநாதன் வந்துகுது பார்’ என்ற குடியானவர்களின் அன்புக் குரல் எல்லாமாகச் சேர்ந்து என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின. அக்கிராமத்துக்குள் நுழைந்து அந்தத் தென்னை மரத்து வீட்டைப் போய்ப் பார்த்தேன். வாசலில் நான் எழுதிய WELLCOME எழுத்துக்கள் அழிந்து போய் மங்கலாய்த் தெரிந்தன.

தென்னை மரத்தில் இளநீர்க் காய்கள் சந்நியாசிக் கலரில் குல குலையாய்த் தெரிந்தன.

எதிரில் பெரிய வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து அந்த மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் தென்னை மரத்து வீட்டை எங்களிடமிருந்து விலைக்கு வாங்கிய மீசைக் கவுண்டர் நான் வந்திருப்பதை அறிந்து ஓடிவந்து நலம் விசாரித்தார். அந்த மரத்திலிருந்து ஒரு இளநீர் வெட்டி வந்து, “ஐயா, இதைச் சாப்பிடுங்க; நீங்க வெச்ச மரம்” என்று உபசரித்தார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. “அந்த வண்டு என்ன ஆச்சு கவுண்டரே?”

தேனாக இனித்த அந்த இளநீரைக் குடித்து தென்னை மரம் எங்கள் குடும்பத்திற்குப் பட்டிருந்த நன்றிக் கடனைத் தீர்த்து வைத்தேன்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/130&oldid=1146121" இலிருந்து மீள்விக்கப்பட்டது