பக்கம்:பழைய கணக்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

கிடைத்து விட்டது போன்ற உணர்வு உள்ளத்தில் பொங்கியது. கொட்டையான அச்செழுத்துக்களோடு எனக்கேற்பட்ட இந்த வாத்சல்ய உறவுதான் பிற்காலத்தில் நான் லைன்போர்ட் எழுத்தாளனவதற்கு அடித்தளமாக அமைந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒருநாள் திடீரென்று ஒரு பரபரப்பான செய்தி வெளியாயிற்று. பாஞ்சால சிங்கம் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்திதான் அது. அந்தச் செய்தி என்னைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்களின் வீரதீரச் செயல்கள் என்னை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீறு கொள்ளச் செய்தன. ஆனாலும் சிறு பையனாக இருந்த காரணத்தால் என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை. பகத்சிங்கிற்கு ஏதாவது செய்தே தீர வேண்டுமென்ற தீவிரம். என்ன செய்வது?.

கிராமத்தில் என் உயிர்த் தோழனை கிருஷ்ணமூர்த்தியைக் கலந்து ஆலோசித்தேன். “ஏதாவது செய்ய வேண்டியதுதான்” என்று அவன் வழி மொழிந்தான். ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இப்படியே எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓரிரு மாதங்கள் ஓடி விட்டன.

திடீரென்று ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி என்னை அழைத்து. “இன்று ஒரு முக்கிய சமாசாரம் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்.

“என்னடா?”

“அடுத்த வாரத்திலிருந்து நான் இந்த ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரன்!” என்றான்.

“என்னடா சொல்கிறாய்? மாடி வீட்டு அய்யாவய்யர்தானே இந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்? நீ எப்படி அவரை மிஞ்ச முடியும்? நீ ஏழை வீட்டுப் பையன்தானே?” என்று கேட்டேன்.

“அடுத்த வாரம் அவர் என்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறார். அடுத்த புதன்கிழமையிலிருந்து நான் அவருடைய தத்துப் பிள்ளை. அப்புறம் அந்த வீட்டுப் பெட்டிச் சாவி என்னிடம் தானே!” என்றேன்.

அதைக் கேட்ட போது எனக்கே பெரிய சொத்து வந்து விட்டதைப் போல் மகிழ்ந்தேன் நான்.

“கிருஷ்ணமூர்த்தி! நாம் பகத்சிங்குக்கு ஏதாவது செய் தாகனும்டா” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/132&oldid=1146123" இலிருந்து மீள்விக்கப்பட்டது