பக்கம்:பழைய கணக்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

”செய்துடலாம் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வா உன்னிடம் மூன்று ரூபாய் தருகிறேன்” என்றான்.

“அந்த மூன்று ரூபாய்க்கு என்ன செய்யலாம்?”

“அம்மாஞ்சி வாத்தியார் வீட்டுக்கு மேற்கே மூன்றாவது வீட்டுத் திண்ணையும் அதைச் சேர்ந்த சின்ன அறையும் காலியாயிருக்கிறது. அந்த அறையில் பகத்சிங் பெயரில் இலவச வாசகசாலை ஒன்று ஆரம்பித்த விடலாம்.” என்றான்.

அடுத்த வாரமே அய்யாவய்யர் வீட்டு கஜானா சாவி கிருஷ்ணமூர்த்தியின் கைக்கு மாறிவிட்டது! ஒருநாள் பகல் வேளை அய்யாவய்யர் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது கிருஷ்ணமூர்த்தி என்னைக் கூப்பிட்டு இருட்டான ரேழி உள்ளே போய் அறையைத் திறந்து மூன்று ரூபாய் கொண்டு வந்து கொடுத்தான்.

ஐந்தாம் ஜார்ஜ் உருவம் கொண்ட மூன்று முழு வெள்ளி ரூபாய்கள்!

அடுத்த கணமே நாலு மைல் தொலைவிலுள்ள வாழைப் பந்தலுக்கு நான் நடையைக் கட்டினேன். கடைத் தெருவுக்குப் போய் அல்லி அரசாணி மாலை, தெனாலிராமன் கதை, துளசி பூஜையின் மகிமை, வாய்ப்பாடு, பகத்சிங் படம், கொஞ்சம் கலர் சாக்பீஸ் இவ்வளவும் வாங்கிக் கொண்டு அப்படியே போஸ்டாபீஸுக்குப் போய் ஆனந்தவிகடனுக்கு ஒரு வருடசந்தா மணியார்டர் செய்து விட்டு வந்தேன். மணியார்டர் பாரம் எழுதிக் கொடுத்தவர் போஸ்ட்மாஸ்டர். ஊர் திரும்பியதும் முதலில் அந்தத் திண்ணை அறையைப் பெருக்கி, ஒட்டடை அடித்துச் சுத்தப் படுத்தினேன். எதிர் வீட்டு மாமியைக் கூப்பிட்டுத் தண்ணீர் தெளித்துக் கோலம் போடச் செய்தேன்.

பகத்சிங் படத்தை அறைச் சுவரில் ஒட்டி, அதற்கு இரு பக்கங்களிலும் ‘ஆதிநாராயண செட்டிக்கே ஒட்டுப் போடுங்கள்’ ‘பலியிடாதீர்கள்’ போஸ்டர்களையும் ஒட்டினேன்.

வெளியே வாசல் திண்ணை விட்டத்தில் கலர் சாக்பீஸால் (எழுத்துக்கு ஒரு கலர்) ‘பகத்சிங் இலவச வாசகசாலை’ என்று எழுதி முடித்தேன். அவ்வளவுதான்; வாசகசாலை அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டு விட்டது. கிருஷ்ணமூர்த்திதான் தலைவர். நான் செயலாளர். ஆரம்பித்து ஒருமணி நேரமாகியும் யாரும் புத்தகம் வாங்கிப்போக வரவில்லை. வாசகசாலை ஆரம்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/133&oldid=1146124" இலிருந்து மீள்விக்கப்பட்டது