பக்கம்:பழைய கணக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாமா கொடுத்த கோட்டு

சின்ன வயதில் எனக்குப் பூணூல் போட்ட போது என்னுடைய மாமா (அம்மாவின் சகோதரர்) நிஜாரும் கோட்டும் தைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் காலத்தில் கோட்டு, நிஜார் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்! எனக்குச் சந்தோஷம் தலைகால் புரியவில்லை. என்னிடம் ஷர்ட்டோ பனியனே இல்லை, ஷர்ட் போட்டுக் கொண்டு அதற்கு மேல்தான் கோட் அணிய வேண்டும் என்பது மாமாவுக்குத் தெரியவில்லை. ‘சட்டை இல்லேயே’ என்று நான் சொன்னபோது, “பரவாயில்லை; அப்படியே கோட்டைப் போட்டுக்கோடா” என்று சொல்லி விட்டார் அவர். எனவே ஷர்ட் இல்லாத குறை தெரியாமல் இருக்க ஒரு வெள்ளைத் துணியை எடுத்து பாரதியார் மாதிரி உடம்பை மறைத்து அதற்கு மேல் கோட்டைப் போட்டுக் கொண்டேன். அப்போது பாரதி பாடல்களை நான் படித்ததில்லை. நம் தேசம் அடிமைப்பட்டிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் பாரதியாரிடத்தில் எனக்கு பக்தி பூர்வமான ஒரு வெறியை உண்டாக்கி வைத்திருந்தார் எங்கள் கிராமப் பள்ளிக்கூட வாத்தியார் மணி ஐயர். அப்புறம் போகப் போகத் தான் பாரதியார் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். ஒரு நாள் பாரதியார் மாதிரியே உடை அணிந்து, அவர் மாதிரியே தலைப்பாகையும் கட்டிக் கொண்டு போய் வாத்தியார் மணி ஐயர் எதிரில் நின்றபோது, “மீசை இல்லையேடா” என்று சிரித்தார்.

எங்கள் ஊரில் விசுவவாதன் என்ற பெயரில் இன்னொரு பையன் இருந்தான் என்னைக் காட்டிலும் ஒரு வயது சிறியவன். நான் பாரதியார் மாதிரி வேஷம் போட்டதிலிருந்து வாத்தியார் மணி ஐயர் என்னை பாரதி விசுவநாதன் என்றும், அவனைச் சின்ன விசுவநாதன் என்றும் அழைக்கத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/135&oldid=1146126" இலிருந்து மீள்விக்கப்பட்டது