பக்கம்:பழைய கணக்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என் முதல் பஸ் பயணம்

வானம் பார்த்த பூமிகளில் வடாற்காடு மாவட்டமும் ஒன்று. வேர்க்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய்ப் பயிர் சாகுபடி அதிகம். சாகுபடி காலங்களில் தவிர மற்ற நாட்களில் விவசாயிகளிடம் பண நடமாட்டம் இருக்காது. கையில் காலணா இல்லாமலே கிராம மக்கள் காலத்தை ஓட்டி விடுகின்ற தந்திரத்தைக் கற்று வைத்திருந்தார்கள்!

வறட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பது, சாகுபடி காலங்களில் அந்தப் பணத்துக்கு ஈடாகக் கொல்லைகளில் விளையும் வேர்க்கடலைகளை அளந்து வாங்கிக் கொள்வது என்று ஒருவகை வட்டி வியாபாரம் அந்தக் காலத்தில் நடந்து வந்தது. அந்த வியாபாரிகளில் என் தந்தையும் ஒருவர்.

இப்படி வசூலிக்கும் வேர்க்கடலைகளே உலர்த்தி, அவற்றை மொத்தமாகக் கட்டி வைத்து, நல்ல விலை வரும் வரை காத்திருந்து, மொத்த வியாபாரி யாரிடமாவது அதிக லாபத்துக்கு விற்பார்கள். வசூல் செய்யும் கடலைக்காயை உலர்த்தி வைக்க விஸ்தாரமான நிலப்பரப்பு தேவைப்படும். எங்கள் ஊரில் அதற்குப் பொருத்தமான இடம் சுடுகாடுதான்!

என் தந்தையைப் போலவே அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட வேறு சிலரும் உலர்த்துவதற்கு அந்த மயான பூமியைத்தான் பயன்படுத்தினார்கள். இப்படி ஒரு மாத காலம் அந்த மயான பூமி முழுவதும் வேர்க்கடலை மயமாய்ப் பரந்து கிடக்கும். சவாரி வண்டிகளின் கூண்டுகளை அங்கே கொண்டு வைத்துக் கொண்டு அதற்குள் உட்கார்ந்து காவல் புரிவார்கள். தினமும் ரிலீவிங் ஸ்டேஷன் மாஸ்டர் போல் நான் போய் அப்பாவை வீட்டுக்கு அனுப்புவேன். சிறு பையனாக இருந்த காரணத்தால் இரவு நேரக்காவலுக்கு மட்டும் என்னை அனுப்ப மாட்டார்கள்.

அந்த மயானத்தை அடுத்து ஒரு ரோடு. ஆரணிக்கும் செய்யாற்றுக்கும் அந்த வழியாக ஒரே ஒரு பஸ் போய் வரும். மயானத்திலிருந்தபடியே அந்த பஸ்ஸின் வரவை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அதுவரை நான் பஸ்ஸில் பயணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/138&oldid=1146129" இலிருந்து மீள்விக்கப்பட்டது