பக்கம்:பழைய கணக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊரே மணக்கும் சேமியா உப்புமா

சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது. தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை'’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

அப்போது ஒரு நாள் குண்டு ஐயர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார், அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார். காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசி காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள். குண்டு ஐயர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார். கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சிவேளை ஆகி விடுமாதலால் குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது. காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர். எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே ஏதாவது டிபன் தயார் செய்து கொள்வார். அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில் ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும் முந்திரியையும் பொன் முறுகலாய் வறுத்து அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார். தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஒட்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/14&oldid=1145662" இலிருந்து மீள்விக்கப்பட்டது